புதன், 3 அக்டோபர், 2012

காந்தி காலத்திலேயே காந்தியம் தோற்று விட்டது

தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார்.
ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.
ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.
காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.
காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.
உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை: