சென்னை :அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் துண்ட றிக்கை வழங்கும் போராட்ட தொடக்க நிகழ்ச்சி கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இன்று நடந்தது. இதில், ஆயிரம் விளக்கு பகுதி திமுக செயலாளர் அன்புதுரையிடம் 30 ஆயிரம் துண்டு அறிக்கைகளை தந்து தனித்தனி குழுவாக சென்று வீடு வீடாக வினியோகிக்குமாறு கருணாநிதி கூறினார். அப்போது, மு.க.ஸ்டா லின், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு, அமிர்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.
அனைவரும்
கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான திமுகவினர் கருப்பு உடையுடன் வந்திருந்தனர். பெண்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: தமிழகம் முழுவதும் மின்னொளி இல்லாமல் இருண்ட சூழ்நிலை உள்ளது. விலைவாசி உயர் வால் வாங்கும் சக்தியை மக்கள் இழந்துவிட்ட நிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை நடக்கும் அவலநிலை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஒவ்வொரு நாளும் எங்கே, எப்போது வீடு இடிந்து விழும், கொலை நடக்கும் என்ற அச்ச நிலையில் மக்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலைமைகளை விளக்கும் பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் போட்டு பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. இவற்றை தட்டி கேட்க இன்று இந்த போராட்டத்தை தொடங்கி வைக்கிறேன். அண்ணா, பெரியார் வழியில் மனித சங்கிலி போராட்டம் நடத்த மிகுந்த பணிவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதி கேட்டோம். நேற்று மாலை வரை அனுமதி உண்டா, இல்லையா என்ற நிலைக்கு அரசு உள்ளாக்கியது. நேற்றிரவு அனுமதி இல்லை என்று அறிவித்தனர். அனுமதி தந்திருந்தால் சென்னையில் ஒரு இடத்திலும், மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடந்திருக்கும். என்னவோ தெரியவில்லை, ஜெயலலிதாவுக்கு நம்மீது ஒரு அன்பு. இந்த கிளர்ச்சியை நாம் பரவலாக நடத்த வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ, அனுமதி மறுத்து விட்டார். எனவே இரவோடு இரவாக தலைமை கழகத்தில் கூடி எடுத்த முடிவின்படி, அறவழியில் இந்த அரசை பற்றிய குற்றம் குறைகளை மக்களுக்கு எடுத்து கூற இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக