வெள்ளி, 5 அக்டோபர், 2012

Kingfisher விமான சேவையை இன்று துவக்குமா?

புதுடில்லி: "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் விமானச் சேவையை இன்று துவக்குமா என்பதில், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இன்ஜினியர்கள், விமானிகளுடன் நடத்திய பேச்சில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விமானப் போக்குவரத்து ஆணையத்தின், பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே, மீண்டும் விமானச் சேவையை தொடர முடியும் என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், ஊழியர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல், சம்பளம் வழங்கவில்லை.

வேலை நிறுத்தம்: இதனால், சம்பளப் பாக்கியை வழங்கக் கோரி, விமானிகள் உட்பட, ஊழியர்கள் கடந்த மாதம், 28ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்ஜினியர்களும், இம்மாதம் 1ம் தேதி முதல் குதித்தனர். விமானங்கள் பறப்பதற்கு, இன்ஜினியர்கள் சான்று அளிக்க வேண்டும். அவர்களே போராட்டத்தில் குதித்ததால், "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானச் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எச்சரிக்கையை அடுத்து, 4ம் தேதி (நேற்று) வரை விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக, "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' அறிவித்தது. கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சய் அகர்வால், விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அருண் மிஸ்ராவை சந்தித்துப் பேசினார். அவரிடம், "ஊழியர்களுக்கான சம்பளப் பாக்கியை உடனடியாக பட்டுவாடா செய்யவும், நிதி நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என, உறுதியளித்தார்.

தோல்வி: இதன் பின், போராட்டம் நடத்தி வரும் விமானிகள், இன்ஜினியர்கள் உடன் மும்பையில் நேற்று முன்தினம் பேச்சு நடந்தது. இதில், மார்ச் மாதச் சம்பளப் பாக்கியை வழங்குவதாகவும், மீதமுள்ள ஆறு மாதங்களுக்கான சம்பளத்தை, நிறுவனத்திற்கு மறுமுதலீடு வரத் துவங்கியதும், படிப்படியாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று, குர்கானில் மீண்டும் பேச்சு நடந்தபோது, கிங் பிஷர் நிறுவனம், தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. இதை ஊழியர்கள் ஏற்க மறுத்ததால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, கிங் பிஷர் விமானச் சேவை இன்று துவங்குமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

அறிக்கை: இப்பிரச்னை குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். அவர் கூறியதாவது: விமானங்களை இயக்குவது குறித்து, கிங் பிஷர் நிறுவனத்திடம் இருந்து தெளிவான திட்டங்களை, மத்திய அரசு எதிர்பார்க்கிறது. விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து அறிக்கையை எதிர்பார்க்கிறேன். கிங் பிஷர் நிறுவனம், விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்து, விமானச் சேவையை எந்த நேரத்தில் இயக்கப் போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள, கிங் பிஷர் விமான நிறுவனம், 8,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. இது தவிர, 7,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜனவரி முதல், இந்நிறுவனத்தின் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. முன்னர், 64 விமானங்களை இயக்கிய இந்நிறுவனம், கடந்த மாதம், 30ம் தேதி வரை, 14 விமானங்களை மட்டுமே இயக்கியது.

உரிமம் ரத்து: விமானச் சேவையை தொடர வேண்டுமானால், குறைந்தபட்சம், ஐந்து விமானங்களையாவது இயக்க வேண்டும். இல்லையேல், அதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும். கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர், பிரபல தொழில் அதிபரும், ராஜ்யசபா எம்.பி,யுமான விஜய் மல்லய்யா. இந்திய மதுபானச் சந்தையில், இவரது யு.பி., குரூப் நிறுவனம் அறிமுகப்படுத்திய, "கிங் பிஷர் பீர்' அதிக விற்பனையாகிறது. சினிமா, கிரிக்கெட் உலகிலும் இவர் பிரபலம். விமானத் துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்ட உடன், அதிலும் களமிறங்கினார். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உருவாக்கிய, "குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்' என்ற புது யுக்தி, அமோக வரவேற்பைப் பெற்றது. விமானச் சேவையில், அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைப் பயன்படுத்தி, வெளிநாட்டு விமான நிறுவனத்துடன் கூட்டு சேர்த்து, கிங் பிஷர் நிறுவனத்தை புத்துயிர் ஊட்ட முயற்சிக்கிறார் விஜய் மல்லய்யா.

கருத்துகள் இல்லை: