புதன், 3 அக்டோபர், 2012

ஜோராக பாதங்களை நோக்கி பாயக்கூடிய துடிப்பு

அம்மாவின் புதிய சபாநாயகர் தனபால்: “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்”

Viruvirupu,
சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் முதல்வர் உத்தரவுக்கிணங்க ராஜினாமா கடிதத்தை கொடுத்ததை அடுத்து, புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 10-ம் தேதி கூடுகிறது. அப்போது, புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக ப.தனபால் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, தனபால் பற்றி அ.தி.மு.க. வட்டாரங்களில் அதிகம் பேச்சு அடிபடுகிறது.
காரணம், “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடல் வரிகள் பலரது வாயில் ஒலிப்பதுதான்.

புதிய சபாநாயகராக முன்னிறுத்தப்பட்டுள்ள தனபால், அ.தி.மு.க.-வில் நீண்டகால அரசியல் பின்னணி உடையவர். எம்.ஜி.ஆர்., தலைமையில், அ.தி.மு.க., முதன் முதலில் ஆட்சியை கைப்பற்றிய, 1977-ம் ஆண்டு, தன், 26 வயதில், முதன்முதலில் சங்ககிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்வு பெற்றவர்.
அப்படியிருந்து, குறிப்பிடத்தக்க பதவி ஏதும் அவருக்கு கொடுக்கப்பட்டதில்லை. கடந்த, 2001-ம் ஆண்டில் நடைபெற்ற அ.தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சராக, சில மாதங்கள் மட்டுமே தனபால் பதவி வகித்துள்ளார். அவ்வளவுதான்.
அதற்காக, 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டபின், 2001-ல்தான் ஜெயித்தார் என்பதுமல்ல. சங்ககிரி தனித் தொகுதியிலிருந்து, நான்கு முறையும், ராசிபுரம் தனி தொகுதியிலிருந்து, ஒரு முறையும் தனபால் வெற்றி பெற்றுள்ளார். அப்படியிருந்தும், அ.தி.மு.க.-வில் யாருடைய கருணைப் பார்வையும் இவர்மீது விழுந்ததில்லை.
ஒருவேளை, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. உடைந்தபோது, இவர் ஜெயலலிதா அணிக்கு எதிராக செயல்பட்டாரா? அட, அதுகூட இல்லிங்க. அ.தி.மு.க.வில் ஜானகி தலைமையில் பிளவு ஏற்பட்டபோது, ஜெயலலிதா தலைமையில் அணிவகுத்தவர்கள், 33 எம்.எல்.ஏ.க்கள். அந்த முதல் 33-ல் தனபாலும் ஒருவர்.
இப்போது புரிகிறதா, “…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்ற பாடல் வரிகள் பலரது வாயில் ஒலிப்பதுதன் காரணம்?
35 வருடகால அ.தி.மு.க. விசுவாசத்துக்கும், ஜெயலலிதாவின் ஆரம்பகால 33 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக இருந்தும், தனபால் ஏன் பிரகாசிக்கவில்லை? மற்றைய அமைச்சர்கள் அளவுக்கு ‘அம்மா மரியாதை’ தெரியாதவரா? மேலேயுள்ள போட்டோவை பார்த்தால் அப்படி தெரியவில்லையே!
விட்டால், செங்கோட்டையனைவிட ஜோராக பாதங்களை நோக்கி பாயக்கூடிய துடிப்பு தெரிகிறதே!
எனவே, அம்மாவிடம் அமைச்சராகும் அனைத்து தகுதிகளும் உத்தரவாதமாகவும், உன்னதமாகவும்  உள்ள நபராகவே தெரிகிறார். தமிழக ஐ.டி. அமைச்சரைவிட அதிகம் படித்திருக்கிறார். (ஐ.டி. அமைச்சர், 8-ம் கிளாஸ் பாஸ்)
அப்படியிருந்தும், ஏன் ரிசர்வ் பிளேயராக இருந்தார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில், சட்டசபை கூடும்போதுதான் தெரியவரும்.
ஒருவேளை விஜயகாந்த் சட்டசபைக்கு திரும்ப முடிவெடுத்து, அங்கு வந்து நாக்கை கடித்தால், இவர் நகத்தை கடிப்பாரோ என்னவோ!

கருத்துகள் இல்லை: