வியாழன், 4 அக்டோபர், 2012

எதிர்ப்பை கண்டு பயப்பட மாட்டேன்: சோனியா ஆவேசம்

ராஜ்கோட்:""நாட்டு நலனுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்ப்பு எழுவது வழக்கமானது தான்; இது போன்ற எதிர்ப்புகளை கண்டு, இப்போது மட்டுமல்ல, எப்போதும் பயப்பட மாட்டேன்; நாட்டு நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார்.
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கியுள்ளன. ஆளும் பா.ஜ., சார்பில், முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், பிரசாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், பிரசார களத்தில் இறங்கியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர் ஊழல் செய்வதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ., ஆளும் மாநில அரசுகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளது; இதுகுறித்து, பா.ஜ., மேலிட தலைவர்கள், வாய் திறக்க மறுப்பது ஏன்?
பா.ஜ., தலைவர்கள், ஊழலை எதிர்க்கவில்லை; காங்கிரசைத் தான் எதிர்க்கின்றனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்கும் பா.ஜ.,வினருக்கு, ஊழலைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளதால், வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என, தவறான தகவல்களை, எதிர்க்கட்சியினர் பரப்புகின்றனர். அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். நுகர்வோருக்கும், நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கும். இடைத்தரகர்கள் தொந்தரவின்றி, விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்.இது தவிர, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே, முடிவு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கு பின்னும், மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் புகார் கூறுவது, ஆச்சர்யம் அளிக்கிறது.

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர் வரை, மானியத்தில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, கூடுதலாக வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு ஆகும் செலவை, அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் என்றும், அறிவித்துள்ளோம். பா.ஜ., ஆளும் மாநிலங்களில், இந்த முடிவு எடுக்கப்படாதது ஏன்?

மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தபோது, குஜராத்துக்கு அளிக்கப்பட்ட நிதியை விட, 50 சதவீதம் கூடுதல் நிதி, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சி தான் காரணம்.நாட்டு நலனுக்காக, சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்ப்பு வருவது, வழக்கமானது தான். இது போன்ற எதிர்ப்புகளைக் கண்டு, இப்போது மட்டுமல்ல, எப்போதும் பயப்பட மாட்டேன்; நாட்டு நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.இவ்வாறு சோனியா பேசினார்.

கருத்துகள் இல்லை: