சனி, 6 அக்டோபர், 2012

Kerala புதிதாக தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: "முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது; எனவே, இது தொடர்பாக, வேறு எந்த விதமான புதிய ஆவணங்களையும், யார் தாக்கல் செய்தாலும், அதை ஏற்க மாட்டோம்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக - கேரள அரசுகளுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, டி.கே.ஜெயின், ஆர்.எம்.லோத்தா, எச்.எல். டாட்டூ, சி.கே.பிரசாத், ஏ.ஆர்.தாவே ஆகிய, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சட்ட, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், வி.கிரி வாதிட்டதாவது: முல்லை பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவிடம், கேரளா தரப்பில், சில ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொடுத்தோம். ஆனால், நிபுணர் குழு, அதை பரிசீலிக்க மறுத்து, தானாகவே ஆய்வு செய்து, ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில், தவறுகள் உள்ளன; எனவே, எங்கள் தரப்பிலிருந்து சில ஆவணங்களை, கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்த முடிவை அறிவிக்கும் போது, எங்களின் ஆவணங்களையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, கிரி வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல், குரு கிருஷ்ண குமார், ""இந்த வழக்கின் விசாரணையை, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ, அவ்வளவு விரைவாக முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முல்லை பெரியாறு அணையின், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில், மத்திய அரசு பிரதிநிதியுடன், இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். இந்தப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு தான், அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அந்த குழு தாக்கல் செய்த அறிக்கை சரியில்லை எனக் கூறி, புதிதாக ஆவணங்களை தாக்கல் செய்யப் போவதாகக் கூறுகிறீர்கள்; இதை அனுமதிக்க முடியாது. நாளை, பிரிட்டனிலிருந்து நிபுணர்களை அழையுங்கள் என, கூறுவீர்கள். அப்புறம், ஜப்பானிலிருந்து கூப்பிடுங்கள், ஸ்பெயினிலிருந்து கூப்பிடுங்கள் என, கோரிக்கை வைப்பீர்கள். மிகச் சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய, உயர்மட்டக் கமிட்டி தான், அணையின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது; இது, தற்காலிகக் குழு அல்ல. அந்த குழுவின் அறிக்கையை சாதாரணமாகக் கருத முடியாது. ஒவ்வொரு தரப்பிலிருந்தும், புதிது புதிதாக ஆவணங்களை தாக்கல் செய்தபடி இருந்தால், எப்போது தான், இந்த வழக்கின் விசாரணையை முடிக்க முடியும்? எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய, இரு மாநில அரசுகளுமே, இனிமேல் புதிய ஆவணங்களை தாக்கல் செய்தால், அதை ஏற்க மாட்டோம். வழக்கின் அடுத்த விசாரணை, நவம்பர் 5ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: