வெள்ளி, 5 அக்டோபர், 2012

திரையரங்குகளில் அதிக கட்டணம் 1,000 கோடி மோசடி

விசாரிக்க உத்தவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, அக்.4- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்து ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய நுகர்வோர் மற்றும் லஞ்சம், குற்றம் ஒழிப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறேன். சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்து பதில் பெற்றுள்ளேன்.
திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து 31.12.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்மத அம்பு சினிமாவை பார்ப்பதற்காக கொளத்தூரில் உள்ள ஸ்ரீகங்கா திரையரங்குக்கு சென்றேன். அந்த திரையரங்குக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.85 ஆகும்.


ஆனால் ரூ.85-க்கு பதிலாக ரூ.150 தொகையை கட்டணமாக வசூலித்தனர். இந்த வகையில் ஒரு காட்சிக்கு ரூ.65 ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் பணத்தை மோசடி செய்கின்றனர். அந்த வகையில், நாளொன்றுக்கு 4 காட்சிகள் என்ற வகையில், ரூ.2.60 லட்சம் மோசடி செய்யப்படுகிறது.
இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பொதுமக்களின் பணம் சுரண்டப்படுவது பற்றி சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் 29.12.2010 அன்று புகார் கொடுத்தேன்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள காசி, கமலா, ஏ.வி.எம்., சங்கம், சுந்தர் உள்பட 10 திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி 21.5.2011 அன்று காவல்துறை ஆணையரிடம் புகார் செய்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த திரையரங்குகள் எல்லாம் நாளொன்றுக்கு 5 காட்சிகள் மூலம் ரூ.34 லட்சத்து 75 ஆயிரம் சட்ட விரோதமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 17 திரையரங்குகள் மீது 26.10.2011 அன்று அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் செய்தேன்.
இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. என்னிடம், காவல் நிலைய ஆய்வாளர் தொலைப்பேசி மூலமாக விசாரணை நடத்தினார். பின்னர் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்குகளில் கட்டணம் தொடர்பான சட்டவிரோத செயல்பாடுகள் தங்குதடையின்றி தொடர்கிறது. டிக்கெட்டில் சில திரையரங்கு பெயர்கள் இடம்பெறவில்லை. சில திரையரங்குகள், தெர்மல் பேப்பரில் கட்டணத்தை அச்சடிக்கின்றனர். அந்த அச்சை எளிதில் அழித்துவிடலாம்.

இதுதவிர, 14 திரையரங்குகள், அனுமதிக்கப்பட்ட காட்சிகளுக்கும் (4 காட்சிகள்) மேலாக சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் கூடுதல் காட்சிகளை காட்டுகின்றனர். இதுபற்றி புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னையில் மட்டும் 120 திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளேன்.

இதுசம்பந்தமாக விளக்கமான புகார் ஒன்றை 21.7.2012 அன்று சென்னை கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு காவல்துறை ஆணையர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீசு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: