செவ்வாய், 2 அக்டோபர், 2012

அன்னாவின் கூட்டாளி கெஜ்ரி இன்று கட்சி தொடங்குகிறார்

புதுடில்லி :ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று முறைப்படி அரசியல் கட்சியை துவங்குகிறார். கட்சியின் பெயர், கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை, டில்லியில் இன்று அவர் வெளியிட உள்ளார்.
சமூக சேவகர் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவில் அங்கம் வகித்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஹசாரேயுடன் இணைந்து, உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினார். "உண்ணாவிரதம் போன்ற, அறவழிப் போராட்டங்களை, மத்திய அரசு அலட்சியப்படுத்துவதால், அரசியல் கட்சி துவங்கி, அதன் மூலம், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என, கடந்த சில நாட்களுக்கு முன், தடாலடியாக அறிவித்தார்.கெஜ்ரிவாலின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு, அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி எப்படியாவது அரசியலுக்குள் பித்தலாட்டம் செய்ய வேண்டும் என்பவர்கள் இந்த சாக்கடையிலும்  ஐக்கியமாகலாம் 

"கெஜ்ரிவாலின் அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, பிரசாரத்துக்கோ, தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது' என்றும் தடை விதித்தார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, "கெஜ்ரிவால் போன்ற சிலர், அரசியல் பாதைக்கு திரும்பியுள்ளனர். நான் கூறுவதை, அவர்கள் கேட்பது இல்லை' என்றார்.

இந்நிலையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்காக டில்லியில் ஆலோசனை நடத்தி வரும், அன்னா ஹசாரேயை, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது.

இதன்பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:எனக்கும், ஹசாரேக்கும் இடையே, கருத்து வேறுபாடும், மோதலும் உள்ளதாக, சிலர் வதந்தி பரப்புகின்றனர். அதுபோல், எதுவும் இல்லை.
"உதவி கேட்டு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், என்னை தொடர்பு கொள்ளலாம்' என, ஹசாரே, எங்களிடம் கூறியுள்ளார். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. மீடியாக்கள் தான், தவறான தகவல்களை பரப்புகின்றன.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்ரிவால் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி துவங்குவது பற்றிய அறிவிப்பை, முறைப்படி இன்று வெளியிட உள்ளார். கட்சியின் பெயர், கொள்கைகள், விதிமுறைகள் ஆகியவை குறித்தும், இன்று அவர் அறிவிப்பார். இதற்கு ஆசி பெறுவதற்காகவே, அன்னா ஹசாரேயை, கெஜ்ரிவால் சந்தித்தார்.தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை தொடர்பாகவும், இன்று அறிவிப்பு வெளியாகும். கட்சியில் இருப்பவர்களின் நேர்மை குறித்த விஷயங்களை மதிப்பிடுவதற்காக, லோக்பால் குழு ஒன்றும் அமைக்கப் படவுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த குழு செயல்படவுள்ளது. அடுத்தாண்டு டில்லியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சார்பில், வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கெஜ்ரிவாலுக்கு மட்டும் ஆதரவு:அன்னா ஹசாரே :அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட்டால், ஆதரிப்பதாக, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அன்னா ஹசாரே கூறியதாவது:அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றி, தவறாக ஒருபோதும் நான் கூறியது இல்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பேன். அவர், மக்களுக்காக பாடுபடுகிறார். இதனால், அவருடன் கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை. அதே நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களையும், ஆதரிக்கப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: