ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கல்முனை மேயர் பதவி: மாயக் கரங்களால் அடித்து விளையாடப்பட்ட பந்து!

முக்கி முக்கி ஒருவாறு பிள்ளையைப் பெற்றாயிற்று! கல்முனை மாநகரசபைக்கான மேயர் தெரிவு பற்றித்தான் சொல்கின்றேன். சும்மா - ஒரு மருத்துவிச்சியை வைத்துப் பார்க்க வேண்டிய இந்தப் பிரசவத்தினை, ஆயிரத்தெட்டு வைத்தியர்கள் ஆயுதங்களோடு சுற்றி நின்று ரணகளப் படுத்தியிருக்கின்றார்கள்!
கல்முனை மாநகரசபையின் நான்கு வருட ஆட்சியில் முதல் இரண்டு வருடங்கள் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மீராசாஹிபு சிராஸ் மேயர் பதவி வகிப்பார் எனவும், மிகுதி இரண்டு வருடங்களும் விருப்பு வாக்கு அடிப்படையில் இரண்டாமிடத்துக்குத் தெரிவான நிஸாம் காரியப்பர் மேயராக இருப்பார் எனவும் மு.காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கின்றது!
ஒரு தேர்தலின் மூலம் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்திய பிறகும் கல்முனை மேயர் பதவிக்கான இழுபறி ஏன் நிகழ்ந்தது? எதற்காக நிகழ்ந்தது? என்கிற சந்தேகம் உங்களில் அதிகமானோருக்கு ஏற்பட்டிருக்கும். அவை நியாயமான சந்தேகங்களாகும்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் மு.காங்கிரஸ் 11 ஆசனங்களை வென்றுள்ளது. மு.கா. சார்பாகப் போட்டியிட்ட 25 அபேட்சகர்களில் மீராசாஹிபு முகமட் சிராஸ் என்பவர் அதிகூடிய விருப்பு வாக்குகளை (16,457) பெற்றிருக்கின்றார். இதனடிப்படையில் பார்த்தால், சிராஸ் என்பவர் மேயராகுவதையே அதிகமான மக்கள் விரும்புகின்றனர். ஜனநாயக ரீதியில் பெரும்பான்மையான மக்களின் விருப்புக்கே மதிப்பளிக்கப்படுதல் வேண்டும். எனவே, சிராஸ் என்பவருக்கே கல்முனையின் மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது – சாதாரணமான மக்களின் ஜனநாயகப் பார்வையாகும்.
ஆனால், சிராஸின் பெயர் எடுத்த எடுப்பில் மேயர் பதவிக்காக மு.கா. தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இடத்தில்தான் பிரச்சினை ஆரம்பமானது!
கல்முனை மேயர் பதவிக்கான பிரச்சினையானது திடீரென அல்லது தற்செயலாகத் தோன்றியதொன்றல்ல! இதை விளங்கிக் கொள்வதற்கு – பின்னணிக் கதையொன்றை நீங்கள் அறிய வேண்டியிருக்கிறது.
அதாவது, மு.கா. சார்பாக கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் சகோதரரான அமீர்அலி என்பவரும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், மு.கா.வில் போட்டியிடவிருந்த பிரபல சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு அமீர்அலி போட்டியிடுவது பிடிக்கவில்லை. இந்த நிலையில், ஹரீஸ் எம்.பி.யின் சகோதரர் தேர்தலில் போட்டியிட்டால், தான் ஒதுங்கிக் கொள்வதாக நிஸாம் காரியப்பர் கட்சித் தலைமையிடம் கூறிவிட்டார். கடைசியில் - நிஸாம் காரியப்பரை தலைமை வேட்பாளராக கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட வைத்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் சகோதரருடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து வெட்டி விட்டார் - மு.கா. தலைவர் ஹக்கீம்! இது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது!
இந்த நிலையில், நிஸாம் காரியப்பரோடு ஹரீஸ் எம்.பி.யின் அரசியல் பகையாளிகளான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கே.எம். ஜவாட் மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கை கோர்த்துக் கொண்டார்கள். நிஸாம் காரியப்பரை கல்முனையின் மேயராக்குவதன் மூலம் - கல்முனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் அரசியலுக்கு முடிவு கட்டப் போவதாக நிஸாம் காரியப்பரின் பிரசார மேடைகளில் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பகிரங்கமாவே தெரிவித்திருந்தார். இது – ஏற்கனவே ஆத்திரத்தோடு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால், மு.காங்கிரசில் வேட்பாளராகப் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த மீராசாஹிபு சிராஸுக்கு தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கினார் ஹரீஸ்!!
ஆக, நிஸாம் காரியப்பர் பக்கமாக - மாகாணசபை உறுப்பினர்களான ஜவாத் மற்றும் ஜெமீல் ஆகியோர் களமிறங்க, சிராஸின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் களத்தில் குறித்தார். ஆரம்பித்தது யுத்தம்!!
எது எவ்வாறிருப்பினும், தேர்தலின் முடிவு சிராஸுக்கே வெற்றியாக அமைந்தது. சிராஸ் 16 ஆயிரத்து 457 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்குத் தெரிவானார். சட்டத்தரணி நிசாம் காரியப்பரால் 13 ஆயிரத்து 948 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்துக்கே வர முடிந்தது.
ஆனாலும், கல்முனையின் மேயர் பதவியை நிஸாம் காரியப்பருக்கே வழங்க வேண்டுமென, அவரின் ஆதரவாளர்கள் மு.கா. தலைமையிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர். இது மு.கா. தலைவருக்கு கடுமையான சங்கடத்தினை ஏற்படுத்தியது. நிஸாம் காரியப்பர் என்கிற நபரும் சாதாரணமான ஒருவரல்லர். இவர் கட்சியின் பிரதிச் செயலாளராகப் பதவி வகிப்பவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்துள்ளார். மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் நெருங்கிய உறவினர். மு.காங்கிரசின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலருக்கு பணம் எதுவும் பெறாமல் நூற்றுக்கணக்கான வழக்குகளை பேசியவர், பேசி வருபவர்!
ஆக, குறித்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பதில் மு.கா. தலைமைக்கும் தர்மசங்கடமானதொரு நிலை ஏற்பட்டது. இதனால், ஆரம்பித்தது மேயர் பதவிக்கான இழுபறி....!!
இந்த இடத்தில் இரண்டு விடயங்களைக் கூற வேண்டியுள்ளது.
முலாவது விடயம்: தற்போது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ள சிராஸுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கும் போது, மேயர் பதவியோ, பிரதி மேயர் பதவியோ இம்முறை உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அந்தப் பதவிகள் தேர்தலில் போட்டியிடும் மூத்த உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் என கட்சியால் கூறப்பட்டதாகவும், அதற்கு சிராஸ் சம்மதம் தெரிவித்ததாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் எழுத்து மூலமானதொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சாட்சியாக கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹசனலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட பலர் இருந்ததாகவும் ஜெமீல் கூறுகின்றார்.
இரண்டாவது விடயம்: இந்தத் தேர்தலில் சக வேட்பாளர்களை விட, ஒரு விருப்பு வாக்கையேனும் நான் குறைவாகப் பெற்றால் - மேயர் பதவியினை ஒரு போதும் கோரமாட்டேன் என்று மு.கா.வின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தனது தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்தார். அந்தவகையில், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி, நிஸாம் காரியப்பர் ஒரு வாக்கினையல்ல, சிராஸை விவும் 2509 விருப்பு வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளார்.
ஆக, மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகள் வழங்கப்படாது என்பதற்கு சிராஸ் சம்மதம் தெரிவித்தே இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றார். அதேவேளை, சக வேட்பாளரை விடவும் குறைவான வாக்குகளை – தான் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் மேயர் பதவியைக் கோரப் போவதில்லை என்று நிஸாம் காரியப்பரும் கூறியிருக்கின்றார். ஆகவே, கனவான் அடிப்படையில் இந்த இருவருமே மேயர் பதவியைக் கோர முடியாது!
இதேவேளை, சட்ட ரீதியாக - மு.கா. சார்பில் வெற்றி பெற்றுள்ள 11 பேரில் எந்தவொரு நபரையும் மேயர் பதவியில் கட்சி அமர்த்தலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது!
சிலவேளை, விருப்பு வாக்கு அடிப்படையில் இரண்டாமிடத்திலுள்ள நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவியை கட்சி வழங்கியிருக்குமாயின் அது பாரிய விபரீதங்களை ஏற்படுத்தியிருக்கும்.
ஏற்கனவே, சாய்ந்தமருதுப் பிரதேசத்தினை கல்முனை மாநகர எல்லையிலிருந்து பிரித்து தனியானதொரு பிரதேச சபையினை சாய்ந்தமருதுக்கு வழங்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமது பிரதேசத்துக்குக் கிடைக்க வேண்டிய கல்முனை மாநகரசபைக்கான மேயர் பதவியும் தட்டிப் பறிக்கப் பட்டிருக்குமாயின், சாய்ந்தமருதுக்கான தனிப் பிரதேச சபைக்கான போராட்டம் வலுவடைவதோடு, மு.காங்கிரசுக்கான ஆதரவும் அப்பிரதேசத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும்!
இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் தோல்விக்கு (விருப்பு வாக்கு அடிப்படையில் முதலிடத்தைப் பெற முடியாமைக்கு) ஒரு வகையில் அவரே காரணமாகிப் போயுள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்ட கல்முனைப் பிரதேசத்தின் அனைத்து அரசியல்வாதிகளையும் நிஸாம் காரியப்பர் அனுசரித்துப் போயிருந்தால் - அவர் இலகுவாக வெற்றியடைந்திருக்க முடியும்! இதை இன்னொரு வகையில் சொன்னால்,மாகாணசபை உறுப்பினர்களான ஜவாத், ஜெமீல் கூட்டணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கும் இடையிலான அரசியல் யுத்தத்தில் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பலிகொள்ளப்பட்டுள்ளார்!
இதேவேளை, ஹரீஸ் மீதான தனது வஞ்சத்தினைத் தீர்த்துக் கொள்வதற்கான அரசியல் களமாக, நிஸாம் காரியப்பரின் பிரசார மேடையினை மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதும் – நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
இந்த இடத்தில் கல்முனை மேயர் பதவி தொடர்பில் முன் வைக்கப்படும் இன்னுமொரு கருத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அதாவது, கல்முனை என்பது முஸ்லிம்களின் தென்கிழக்கு அலகின் தலைநகராகும். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் சொந்த ஊர் வேறு! இன்னும் சொன்னால், இலங்கை முஸ்லிம்களின் புவியியல் அடையாளமாகவும் போற்றப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் கொண்ட ஒரு பிரதேசத்தின் முதல்வர் பதவிக்கு - அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி கொண்ட ஒருவரையே நியமிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், அதற்கு மிகப் பொருத்தமானவர் நிஸாம் காரியப்பர்தான். கட்சிக்குள் நேற்று வந்து – கண், மண் தெரியாமல் காசைச் செலவு செய்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஒரு 'பொடியனு'க்கு கல்முனையின் மேயர் எனும் சிறப்பு மிக்க ஆசனத்தை எவ்வாறு வழங்குவது என்பது ஒரு சாராரின் அங்கலாய்ப்பாகும்.
ஒரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்க்கையில் இந்தக் கருத்து சரியாகத் தோன்றினாலும், மற்றொரு சாரார் இந்தக் கருத்தினை கடுமையாக மறுக்கின்றார்கள். அதாவது, அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றினைக் கொண்டவர்களைத்தான் கல்முனை மேயராக்க வேண்டும் என்றால் - அவ்வாறானவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு மு.கா. தலைமை சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும். அவற்றினைக் கவனியாமல் வேட்பாளர்களைத் தெரிவு செய்து களமிறக்கி விட்டு, எல்லாம் முடிந்த பிறகு இப்போது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரை மேயராக்காமல் அப்புக்கத்துக் கதை பேசி இழுத்தடித்தமையானது – எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்கள் மற்றைய பகுதியினர்!
இந்த வாதப்பிரதிவாதங்களைக் கவனிக்கும் போது நமக்குள் பூதாகரமாக ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, கட்சிக்குள் நேற்று வந்து – வேட்பாளராகக் களமிறங்கி பண நோட்டுக்களை அள்ளியெறிந்து தேர்தலுக்காகக் செலவு செய்ததாகக் சொல்லப்படும் ஒருவருக்கு – மு.கா. வாக்காளர்கள் தமது அதிகபட்ச விருப்பு வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கின்றார்கள் என்றால்.... ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியானது தனது வாக்காளர்களை அரசியலில் முதிர்ச்சி நிலைப்படுத்தவில்லையா? அல்லது வாக்காளர்கள் அரசியலில் முதிர்ச்சியடையவில்லையா?
உதாரணமாக, நடந்து முடிந்த கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.கா. சார்பாக சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மீராசாஹிபு சிராஸ் மட்டுமன்றி, மு.கா.வின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முழக்கம் மஜீத்தும் போட்டியிட்டிருந்தார்.
சிராஸ் என்பவர் - மு.காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலின்போதே அறிமுகமான ஒருவராவார். ஆனால், முழக்கம் மஜீத் அப்படில்ல! அவர் மு.கா.வின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். மறைந்த தலைவர் அஸ்ரப்போடு இணைந்து இயங்கியவர். கட்சிக்காக பல தியாகங்களை இவர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், துரதிஷ்டவசமாக, தேர்தல் முடிவுகளின் படி, முழக்கம் மஜீத் தோல்வியடைய, சிராஸ் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக்கின்றார்.
இந்த முடிவுகள் நமக்குச் சொல்ல வரும் சேதிகள்தான் என்ன?
•   நமக்குள் தோன்றியிருக்கும் கேள்வி போல், மு.காங்கிரசின் வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சி நிலைப்படுத்தப்படவில்லையா?
•   அல்லது, மு.கா. வாக்காளர்கள் பண மூட்டைகளின் பின்னால் பயணிக்கத் தொடங்கி விட்டனரா?
•   அல்லது, கட்சிக்காகச் செய்யப்படும் தியாகங்கள், கட்சியில் வகிக்கும் சிரேஷ்டநிலைத் தன்மைகளுக்கெல்லாம் வாக்காளர்களிடத்தில் பெறுமதியே இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை – சிலவேளைகளில் 'ஆம்' என்பது போலவே தெரிகிறது. அவ்வாறு தெரிவதானது அரசியல் ரீதியாக கட்சிக்கும், சமூகத்தக்கும் ஆபத்தானது! இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், பணமுடையோனும் - பலமுடையோனுமே (சண்டியர்கள்) முஸ்லிம் சமூகத்துக்குள் கோலோச்சத் தொடங்குவார்கள். புத்திஜீவிகளும் - அனுபவஸ்தர்களும் புறம்தள்ளப்படுவார்கள் என்கின்றார் மு.கா.வின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரொருவர்!
எது எப்படியிருப்பினும், கல்முனை மேயர் பதவி எனும் இழுபறி தொடர்பில் மு.கா. தலைமை எடுத்துள்ள முடிவானது சேதாரம் குறைந்ததொரு தீர்மானமாகும்!
இவ்வாறானதொரு முடிவினையே தலைவர் ஹக்கீம் எடுப்பார் என்று 'பேஸ்புக்' தளத்தில் ஏற்கனவே நாம் எதிர்வு கூறியிருந்தமையும் ஞாபகிக்கத்தக்து! (அதாவது சிராஸுக்கே மேயர் பதவி வழங்கப்படும்)
இறுதியாக ஒன்று!
மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே இப்படித்தான் - நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும், ஓட்டமாவடியைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதருக்கும் பங்கு வைக்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்டதொரு நடாளுமன்ற உறுப்பினர் பதவியின் முதல் அரைவாசி காலப் பகுதியை ஹிஸ்புல்லா வகிப்பார் எனவும், மிகுதிக் காலத்துக்கு முகைதீன் அப்துல் காதர் நியமிக்கப்படுவார் எனவும் அஸ்ரப் அவர்கள் அறிவித்தார். ஹிஸ்புல்லாவும் அவ்வாறே நடந்து கொள்வதாகப் பள்ளியில் சத்தியம் செய்து பதவியினை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், பரிதாபம்! கடைசிவரை ஹிஸ்புல்லா தனது வாக்குறுதியைக் காப்பாற்றவேயில்லை!
இந்தக் கதை இங்கு எதற்கு என்கிறீர்களா?
சும்மா என்று வைத்துக் கொள்ளுங்கள்!!!•  
- நன்றி: தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை: