திங்கள், 18 அக்டோபர், 2010

No invitation for TNA. எதிர்க்கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்பதாலேயே மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம்

எதிர்க்கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்பதாலேயே மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம் போன்ற அரச அபிவிருத்திக் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைப்பதில்லை என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவுகாண நடத்தப்படும் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டால், முரண்பாடுகள் ஏற்படும். மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது. இதன் காரணமாகவே கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றி மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கி வருகின்றது என்றார் ரிசாத் பதியுதீன்.
வவுனியா மாவட்டத்துக்கான இணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வவுனியா செயலகத்தில் இடம் பெற்றது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சர் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கிளப்பிய பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்கையிலேயே இப்படிக் கூறினார்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வுப் பணிகளுக்கு அந்தப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், அக்கூட்டங்களில் பங்குபற்ற கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்தே சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
வன்னி மாவட்ட இணைப்புக்குழுத் தலைவரான உங்களது உத்தரவுப்படியா அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் உத்தரவுப்படியா கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிவசக்தி ஆனந்தன் அமைச்சரிடம் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர், கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பாமைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
அழைப்பு அனுப்பப்படாமைக்கு என்ன காரணம் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கூட்டமைப்பினரைக் கூட்டங்களுக்கு அழைத்தால் அவர்கள் தெரிவிக்கும் விடயங்களுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும். அதன் காரணமாக மக்களின் பணிகள் தாமதமாகும். இதனால் கூட்டமைப்பினரைக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வவுனியாவில் ஜனாதிபதி கூட்டும் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. அழைப்புக் கிடைத்தால், எமது மக்களின் நன்மை கருதிப் பங்குபற்றுவோம் என்றார் சிவசக்தி ஆனந்தன்.

கருத்துகள் இல்லை: