வியாழன், 21 அக்டோபர், 2010

காரில் வந்து இலவச கலர் டிவி வாங்கிய 'நல்லவர்கள்'!

சென்னை: 'ஃபிரீயா குடுத்தா...' என்ற கவுண்டமணியின் புகழ்பெற்ற நக்கல் கமெண்டுக்கு 100 சதவீதம் பொருத்தமானவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள் [^]தான்.

'அடடா... நம்ம வீட்டில்தான் ஏற்கெனவே இரண்டு கலர் டிவி [^] இருக்கே... இதை வாங்கி என்ன செய்யப் போறோம்' என்ற நினைப்பு அவர்களுக்கும் இல்லை... 'இல்லாத அல்லது வாங்க முடியாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு இந்த இலவச டிவியைத் தரலாம்' என்ற சிந்தனை அரசுக்கோ இல்லை. இதன் விளைவு பலகோடி ரூபாய் மக்கள் பணம் இலவச கலர் டிவிக்காக வீணடிக்கப்படுகிறது.

சென்னை கேகே நகரில் ஒரு தெரு. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தனர் இந்த இலவச கலர் டிவி வாங்க. சிலர் கசங்கிய லுங்கியில், இன்னும் சிலரோ மேல்நாட்டு வாசனையோடு ஷார்ட்ஸில்.

இன்னும் சிலரோ காரில் வந்திறங்கினர் இந்த கலர் டிவியை வாங்க. சிலர் இந்த டிவியை எடுத்துப் போக தங்கள் வீட்டு வேலையாளையும் கூட்டி வந்திருந்தனர்.

வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளும் அளவுக்கு தெம்பும், திராணியும் உள்ளவர்கள் இந்த டிவியை எதற்கு வாங்க வேண்டும்... இந்த டிவியை வைத்துதான் ஓட்டுப் போடப்போகிறார்களா இவர்கள்?

இந்தக் கேள்வியை ஒரு குடும்பத் தலைவியிடம் கேட்டோம்.

"ஏன் வாங்காம விடணும்... நான் வாங்கலைன்னா அதை யாருக்காவது வித்துடப் போறாங்க. அதனால நான் விடமாட்டேன். ஆனால் என் ஓட்டு இந்த டிவி கொடுத்தவங்களுக்குத்தான்னும் சொல்ல மாட்டேன். யாருக்கு ஓட்டுப் போடணும் என்பதை வாக்குச் சாவடியில்தான் முடிவு செய்வேன்.." என்கிறார் மிகத் தெளிவாக. இன்னும் சிலர் கூட இப்படித்தான் கூறினர். அதாவது கொடுப்பதை ஏன் விட வேண்டும் என்பதே இவர்களதே ஒரே பதில்- ஆனால் கொடுத்ததற்காக வாக்குகளை திருப்பித் தர வேண்டும் என்ற அவசியமில்லை என்ற எண்ணமும் இவர்களிடம் உள்ளது.

டிவி வாங்க வசதியில்லாத ஏழை மக்களுக்கான திட்டம் என்று அறிவிக்கபட்ட இந்த இலவச கலர் டிவி சமாச்சாரம், இன்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், (அவர்கள் கோடீஸ்வரர்களாகவே இருந்தாலும்) விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1.63 கோடி குடும்பங்களுக்கு இந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு ரூ 4000 கோடி.

இந்த நிலையில் தேர்தல் [^]நெருங்கும் சமயம் என்பதால், மேலும் 10 லட்சம் கலர் டிவிக்களை வாங்கியுள்ளது தமிழக அரசு. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், அதற்காக விண்ணப்பித்துக் காத்திருப்போர் உள்ளிட்ட அனைவருக்குமே அடையாள அட்டையாக எதையாவது காட்டச் சொல்லி கடைசி நேரத்தில் பெட்டியைக் கையில் திணிக்கக் கூடும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இதில் முக்கியமான விஷயம், இந்த டிவி பெட்டிகளை வாங்கிய ஏழைகளில் பலர் அவற்றை ரூ 1500 வரை விலை வைத்து விற்று வருவதுதான். அரசு போட்ட இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பெற்றுள்ள ஒரே பலன் இதுதான்!

கருத்துகள் இல்லை: