செவ்வாய், 19 அக்டோபர், 2010

திருப்பி அனுப்பப்படும் ஆபத்தில் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்கள்

 ஹரிகரன்

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எழுந்துள்ள முக்கியமான பிரச்சினை அகதிகள் விவகாரமாகும்.  இலங்கையில்    இருந்து வெளிநாடுகளில் புகலிடம் தேடும் அகதிகளின் எண்ணிக்கை, போர் முடிவுக்கு வந்த பின்னர் சடுதியாக அதிகரிக்க, அது அரசாங்கத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.     புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவது  முதலாவது பிரச்சினை.
போர் முடிந்த பின்னரும் அகதிகள் வருகின்றனரே அப்படியானால் இலங்கையில் பிரச்சினை ஓயவில்லையா என்று அரசு மீது வெளி நாடுகள் தொடுத்த கேள்வி இரண்டாவது பிரச்சினை    அகதிகள் வருகையால் வெறுப்படைந்த நாடுகள் இலங்கைக்குக் கொடுத்த அழுத்தங்கள் மூன்றாவது பிரச்சினை.
இப்படிப் பலமுனைப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் புலம்பெயரும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கங்கணம் கட்டியுள்ளது அரசாங்கம்.   இதனால்,    இலங்கையில் இருந்து அகதிகளாக யாரும் வெளியே செல்ல முடியாதவாறு   பல்வேறு தடைகள்,   கட்டுப்பாடுகளைப் போட ஆரம்பித்துள்ளது.  கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்தி   படகு அகதிகளின் பயணங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது.
ஆயினும் வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து கனடா,     ஐரோப்பிய நாடுகள்,  அவுஸ்திரேலியா போன்றவற்றில் அடைக்கலம் தேடும் முயற்சிகளில் அகதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.   இந்தக் கட்டத்தில்தான் இலங்கை அரசாங்கம், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கடந்தவாரம் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு வடக்கேயுள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள 17 தொடர்மாடிக் குடியிருப்புகளை தாய்லாந்து இராணுவக் கொமாண்டோக்களும் குடிவரவு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சுற்றி வளைத்தனர்.    கடந்த திங்கள் காலை 6.30 மணிக்குத் தொடங்கியது இலங்கைத் தமிழர்களைப் பிடிக்கும் இந்தத் தேடுதல் வேட்டை.
இலங்கையில் இராணுவத்தினர், பொலிஸார், இந்தியப் படையினர் என்று எத்தனையோ சுற்றிவளைப்புத் தேடுதல்களைச் சந்தித்த தமிழர்களுக்கு தாய்லாந்திலும் தொடர்ந்தது சுற்றிவளைப்புப் பிரச்சினை.   இந்தத் தேடுதலின் போது ஆண்கள், பெண் கள், குழந்தைகள்  என்று  155 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கணிசமானோரிடம் வீசா இருக்கவில்லை சிலரிடம் பயண ஆவணங்களும் இல்லை.
இரண்டு மாதகால சுற்றுலா வீசாவில் தாய்லாந்து சென்று எங்காவது வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்ற கனவுடன் ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தில் பதிவு செய்து விட்டுக் காத்திருந்தவர்களே அவர்கள்.       அவர்களில் முகவர்களால் ஏமாற்றப்பட்டு   தமது    கடவுச்சீட்டைக் கூடத் தொலைத்து விட்டு நின்றவர்களும் அடங்கியிருந்தனர்.   கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தடுப்பு முகாக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அவர்களில் வீசா காலாவதியாகாத நிலையில் இருந்த 27 பேர் விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறது தாய்லாந்து.   இப்போது ஏனைய 128 தமிழர்களினதும் எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கைது செய்யப்பட்டவர்களில் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் இருக்கின்றனர் என முன்னதாக தாய்லாந்து அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.  ஆனால் பின்னர்,    தாய்லாந்து குடிவரவுத் திணைக்களப் பேச்சாளர்,     அவர்களில் யாரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கிடையாது என்று கூறியுள்ளார்.
இந்த சுற்றிவளைப்புத் தேடுதலின் பின்னணியில் தாய்லாந்து மட்டும் இருக்கவில்லை.    ஏனென்றால் தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் பல வருடங்களாகவே இருந்து வருகின்றனர். இதுவரை இங்கு இது போன்றதொரு சுற்றிவளைப்பு நடத்தப்படவில்லை.    வேறு சில நாடுகளின் துண்டுதலின் பேரில் தான் தாய்லாந்து இப்படிச் செயற்பட்டிருக்கி றது.
மூன்று அல்லது நான்கு நாடுகள் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.   தாய்லாந்து இதில் நேரடியாகப் பங்கேற்ற நாடு.  இலங்கை அரசாங்கமே அகதிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.   கனடாவின் இன்ரபோல் பொலிஸாரும் தேடுதலில் பங்கேற்றதாக முன்னர் செய்திகள் வெளியாகின. அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இப்போது தமது நாடு இதில் பங்கேற்கவில்லை என்று கனடா தெரிவித்துள்ளது.    ஆனால் இந்த விவகாரத்தில் கனடா பங்கேற்றிருந்தால் கைதான தமிழர்களுக்கும் ஏதாவது  நடந்தால்  அதற்கு கனடாவே பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்கள் அந்த நாட்டில் இருந்து எழுந்துள்ளன.   கப்பல் மூலம் இவர்கள் கனடாவுக்குப் புறப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தான் கனடிய அரசு இந்த நடவடிக்கைக்கு உதவியை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை அவுஸ்திரேலியாவும் இந்த அகதிகள் விவகாரத்தினால் நெருக்கடிகளைச் சந்திப்பதால் தாய்லாந்துக்கு உதவியிருக்கலாம்..  இலங்கை அரசுக்கு தாய்லாந்து மீது நீண்ட காலமாகவே ஒரு கண் இருந்து வந்தது.
புலிகளின் ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் மையமாக தாய்லாந்து இருப்பதாக இலங்கை அரசு சந்தேகித்து வந்தது.   இதனால் தான் பல வருடங்களுக்கு முன்னரே தாய்லாந்துக்கான தூதுவராக,   இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை  நியமித்திருந்தது.
‘சன் சீ‘  கப்பல்,    தாய்லாந்தில் இருந்து புறப்பட்டது உறுதியானதும் அகதிகள் அங்கிருந்தே செல்கின்றனர் என்ற நோக்கில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்தின் மீது அதிக அக்கறை காண்பித்து வருகிறது.   அண்மைக்காலத்தில் மற்றொரு கப்பல் கனடாவுக்குப் புறப்படத் தயாராக இருப்பதாக புரளியைக் கிளப்பிவிட்டதும் இலங்கை அரசுக்கு நெருக்கமான தரப்புகள் தான்.
பாங்கொக்கில் உள்ள தூதரகம் மூலம் திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் தாய்லாந்துக்கும் கனடாவுக்கும் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.   கடந்த வாரம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அளித்திருந்த பேட்டி ஒன்றில், வெளிநாட்டுத் தூதரகங்களில் இராஜதந்தரிகளாக நியமிக்கப்பட்ட படை அதிகாரிகள் புலிகளின் நகர்வுகள் எனக் கூறிப் பல தகவல்களைத் திரட்டி அந்தந்த நாடுகளுக்கும், இலங்கைக்கும் அனுப்பி வருவதாகக் கூறியிருந்தார்.
அதுவேதான் தாய்லாந்திலும் நடந்திருக்கிறது.  தாய்லாந்தில் கைதான 155 பேல் 128 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.   தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கான எந்த ஆவணத்தையும் கொண்டிருக்காத இவர்கள் ஐ.நாவில் அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் ஆபத்து உள்ளது.
முன்னதாக இவர்களில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும்  இருப்பதாக தாய்லாந்து அரச ஊடகம் கூறியிருந்தது.   ஆனால் இப்போது தாய்லாந்து அதிகாரிகள் புலிகள் யாரும் இல்லை எல்லோருமே குடும்பமாகவும் தனியாகவும் உள்ளவர்கள் தான் என்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
கைதாகி வீசா இருந்ததால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 27 பேரும் இலங்கைக்கு உடனடியாகவே நாடு கடத்தப்பட்டனரா அல்லது உண்மையாகவே விடுவிக்கப்பட்டனரா என்பதே அந்த சந்தேகம்.      புலிகளைத் திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு கைது செய்யும் என்பது நன்றாகவே தெரிந்த விடயம். இந்தநிலையில், அத்தகையதொரு சர்ச்சை உருவாவதைத் தவிர்க்க புலிகள் இல்லையென்றும் கூறியிருக்கலாம் அல்லது இலங்கையுடன் சேர்ந்து ஒரு நாடகத்தையும் ஆடியிருக்கலாம்.   இலங்கை அரசு இவர்களில் புலிகள் பலரும் இருப்பதால்தான் அவர்கள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அகதிகள் தொடர்பாக சர்வதேச சட்டத்தில் தாய்லாந்து        கையெழுத்திடாததால் சிறிலங்காவுக்கே இவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகிறது.  அப்படியான நிலை ஏற்பட்டால் அகதிகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை.     ஏற்கனவே இந்தோனேஷியாவில் இருந்து நாடு திரும்பிய  மூன்று அகதிகள் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கட்டத்தில் அகதிகளின் பாதுகாப்புக்குத் தாய்லாந்தோ கனடாவோ பொறுப்பேற்கப் போவதில்லை.
கனடாவைப் பொறுத்தவரையில் தனது  நாட்டுக்கு வரவிருந்தவர்களைத் தடுத்து விட்டோம் என்ற நிம்மதி.   ஆனால் கனடாவுக்கு இந்த விவகாரத்தினால் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.   கனடாவுக்கு வந்து கொண்டிருந்த போது இவர்கள் தடுக்கப்பட்டிருந்தால் அதை யாரும் குறைகூற முடியாது.   ஆனால் தாய்லாந்தில் அகதிகளாக இருந்தவர்களைத்தான் கைது செய்ய உதவியிருக்கிறது கனடா.      கைது செய்யப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள்  ஏற்பட்டால்  கனடா நிச்சயம்   அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
மனிதாபிமான  முறையில் கனடா கையாண்ட மிகமோசமான நடவடிக்கையாகவே அது சித்திரிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: