செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஆசிரியர் அலட்சியத்தால் பார்வை இழந்த பள்ளி மாணவன்!

தூத்துக்குடி அருகே ஆசிரியரின் அலட்சியத்தால் பார்வையை இழந்தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்.

அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகர் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களது மகன் கார்த்திக் (7).

இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கோகிலா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளி்த்தார். அதில், கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி கார்த்திக் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். வகுப்பறையில் இருக்கும் போது உடன் பயிலும் மாணவர் ஒருவர் குச்சியால் கார்த்திக்கின் கண்ணில் குத்தியுள்ளார்.

இதை பார்த்த பிறகும் கூட வகுப்பாசிரியர் கார்த்திக்கிற்கு முதலுதவியும் அளிக்கவில்லை, பெற்றோருக்கும் தகவல் கொடுக்கவில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு தான் எங்களுக்குத் தெரியும்.

உடனே அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு இன்னும் முழுமையாக பார்வை கிடைக்கவில்லை. இது ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தின் காரணமாகவே நடந்துள்ளது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டபோது கண்பார்வை கிடைக்க ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாகக் பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் தற்போது இச்சம்பவத்தை அலட்சியப்படுத்தி வருகிறது.

எனவே, எனது மகனுக்கு கண்பார்வை முழுமையாக கிடைத்திட ஆகும் மருத்துவ செலவு முழுவதையும் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மேலும், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: