புதன், 20 அக்டோபர், 2010

வில்லனாக மாறிய இயக்குனர்


 


    காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சோகமான வெயில்காலத்தையும், இன்பமான மழைக்காலத்தையும் திரைக்காவியமாக பதிவு செய்யும் படமாக உருவாகிவருகிறது ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’. 



இயக்குனர் ஏகாதசியின் இயக்கத்தில் தேஜ் நாயகனாக நடிக்க,  அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். மனோபாலா, ‘பசங்க’ சிவக்குமார்,  தீபாசங்கர் இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர் துரைராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.  எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி. சந்திர சேகர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் ஏகாதசி இந்தப் படத்தில் பாடல்களை எழுதி இருப்பதோட வில்லனாகவும் வெளுத்து வாங்குறாராம். இதில் வில்லனாக நடிக்க இருந்தவர் இயக்குனர் ராசு மதுரவன். ஆனால் அவரின் முத்துக்கு முத்தாக பட வேலைகளில் பிஸியாகிவிட்டதால் ஏகாதசியே ஏக பொருத்தமான வில்லனாக மாறிவிட்டாராம். 

படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியதோடு ஒரு கூத்துபாட்டையும் பாடியிருக்காராம் மனுஷன். இந்தப் பாடலுக்கு செம கூத்தாட்டம் போட்டிருப்பவர் ‘மானாட மயிலாட’ புகழ் சுசிபாலா. இசை - பரணி, ஒளிப்பதிவு சுகுமார். 


இந்தப் படத்தின் சுவாரசியமான ஒருவிஷயம், கம்மங்காட்டு பொம்மையை காதலுக்கு சாட்சியாக்கியுள்ளனராம். இன்னும் சொல்லவேண்டும் என்றால் படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரமாகவே கம்மங்காட்டு பொம்மை நடிச்சுருக்காம். இதற்காக மதுரைக்கு அருகே உள்ள பெருங்காமநல்லூரில் 5 ஏக்கர் நிலத்தில் 3 மாதம் கம்பு பயிர் வளர்த்து காதல் காட்சிகளை பசுமையாக படமாக்கியிருக்காராம் இயக்குனர்.
 
“கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - எல்லோர் வாழ்விலும் நடந்தக் காதலாகவும் இருக்கும். அதே நேரம் யார் வாழ்விலும் நடக்க கூடாத காதலாகவும் இருக்கும்” என சொல்லி உருக வைக்கிறார் இயக்குனர் ஏகாதசி.

படத்தின் இசைவெளியீட்டை சென்னையிலும், பட அறிமுகவிழாவை கலைநிகழ்ச்சிகளுடன் சிங்கப்பூரிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. 

கருத்துகள் இல்லை: