செவ்வாய், 19 அக்டோபர், 2010

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சனின் உத்தரவுக்கமைய மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள  சிறுமியர் இல்லமொன்று இன்று சீல் வைத்து மூடப்பட்டது.
மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்கு கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து மன்னார் நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி சிறுமியர் இல்லத்தை மூடுமாறு மன்னர் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் இன்று திங்கட்கிழமை மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதையடுத்து  குறித்த சிறுமியர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
மேற்படி இல்லத்தில் 18 வயதிற்குற்பட்ட பல சிறுமியர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். விடுமுறை நாட்களில் மேற்படி இல்லத்தின் நிர்வாகி, சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டு வேளைக்காக அழைத்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே மேற்படி துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள 15 வயதுடைய சிறுமி ஒருவர் குறித்து, மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினுடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தியமையை அடுத்து, மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரண்டு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் குறித்த சிறுமியர் இல்லத்தில் உள்ள சிறுமியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி குறித்த இல்லத்தினை மூடுமாறும் நீதீபதி உத்தரவிட்டார். இதற்கமைவாக  சிறுமியர் இல்லம் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபரான  சிறுமியர் இல்ல நிர்வாகி தலைமறைவாகியுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
- தமிழ்மிரர் -

கருத்துகள் இல்லை: