கிளிநொச்சி, இரணைமடுக் குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த் தேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வடபகுதி மக்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் இரணைமடுக்குளப் பகுதிக்கு விஜயம்செய்த நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவப் பிரதி அமைச்சர் எச்.எம்.சந்திரசேனவினாலேயே இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்தத் திட்டம் தொடர்பிலே வடபகுதி தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான சீ.வி.கே.சிவஞானம் இது குறித்துக் கருத்துக் கூறும்போது, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய திட்டங்கள் அமுல்படுத் தப்படும்போது அதனை ஒத்துழைத்து வரவேற்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள ஒரு பகுதி மக்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு, ஏனைய மக்களின் நலனைக் கருத்திலெடுக்காது அமுல்படுத்த நினைக்கும் திட்டங்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படவேண்டும். மகாவலி கங்கை நீரை இரணைமடுக்குளத்துக்கு கொண்டு வரவுள்ள திட்டத்தின் பின்னணியில் வடபகுதி நிலங்களில் தமிழ்மக்கள் அல்லாதோர் குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இது குறித்து வட பகுதித் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மகாவலி கங்கைநீரை இரணைமடு குளத்துக்கு வழங்குவதன் மூலம் அத்திட்டத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரத்துக்குக்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் வட மாகாண சபைக்குள்ள அதிகாரங்களான நீர்ப்பாசனம், காணி, விவசாயம் என்பன பறிபோகும் அபாயம் ஏற்படும். அத்துடன் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகும். அது வடபகுதியில் உள்ள மக்களின் நலனில் எந்தளவுக்கு அக்கறை கொள்ளும் என்று தெரியவில்லை. அநுராதபுரத்துக்குச் செல்லும் மகாவலி கங்கை நீரின் அளவு போதுமானதாக இல்லை என அந்தப் பகுதி மக்களே விசனம் தெரிவிக்கும் நிலையில் அதனை இரணைமடு குளத்துக்குக் கொண்டு வருவது எந்தளவுக்கு சாத்தியமாகும். இதன் காரணமாகவே வடபகுதித் தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக