சென்னையிலுள்ள கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் 125-ம் ஆண்டு விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற முதல்வர் கருணாநிதிக்கு, கலைஞர் காப்பீட்டுத் த
சென்னை, அக். 14: மனித நேயத்துடன் பணியாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். ÷சென்னையில் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் 125-ம் ஆண்டு விழா-சேப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா-இதய நோய் மற்றும் மகளிர் கருப்பை வாய், மார்பகப் புற்றுநோய்த் தடுப்புத் திட்டங்களை வியாழக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சேப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினரான எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து கட்டப்படுவது அல்ல; இந்தத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்டிருகின்ற நிதியிலிருந்து கட்டப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் முதன்முதலில் தொகுதி மேம்பாட்டு நிதியை பொதுப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அனுமதியை மத்திய அரசு ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி இருந்தது. ÷அதைப் பார்த்து, சட்டப் பேரவை தொகுதி நிதியையும் ஏன் நல்ல பணிகளுக்கு ஒதுக்கக் கூடாது என்ற கேள்வி என் முன்னால் எழுந்தது. ÷இதனால், சட்டப் பேரவையில் அதை அறிவித்து, அதை சட்டப் பேரவை உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு, அந்த வகையில் இன்றைக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை இதுபோன்ற நல்ல காரியத்துக்காகச் செலவழித்து இருக்கிறோம். ÷இந்தியாவில் மத்திய அரசினுடைய பணத்தை- அவர்கள் நாடாளுமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்குகின்ற பணம் ஏற்கெனவே ஆங்காங்கே நாடாளுமன்ற தொகுதிகளுக்காகச் செலவழிக்கப்படுகிற நிலையிருந்தாலும் கூட, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்படுகிற பணத்தை-அந்தத் தொகுதி மேம்பாட்டுக்காகச் செலவழிக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தது தமிழகத்தில்தான். தமிழ்நாடு அரசுதான் அதைச் செய்தது. ÷முதலில் அது 25 லட்சமாக ஒதுக்கப்பட்டது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தொகை உயர்த்தப்பட்டு இப்போது ஒரு கோடியே 75 லட்சம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொண்டு, நம்முடைய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகுதிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ÷மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் கட்டினால் மாத்திரம் பலனில்லை. அங்கே இத்தனை மருத்துவர்கள் என்று கணக்கு காட்டினால் மாத்திரம் பயனில்லை. அந்தக் கட்டடங்களிலேயிருந்து பணியாற்றுகிற மருத்துவர்கள், அந்த மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கிற செவிலியர்கள் உள்ளிட்ட மற்ற மருத்துவத் துறை நண்பர்கள் அனைவரும்-ஏதோ ஒரு கடமை ஆற்றுகிறோம் என்று இல்லாமல்-இந்தப் பணி நம்மை வந்து அடைந்திருக்கிறது. அந்தப் பணியை மனித நேய மனப்பான்மையோடு நாம் நிறைவேற்றுவோம் என்ற அந்த உணர்வைப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும்-மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். ÷அரசுக்கு ஒத்துழைப்பு வேண்டாம்: அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் யாரையும் கேட்கவில்லை. சாதாரண, சாமானிய ஏழையெளிய மக்களுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அனைவரும் பாடுபட வேண்டும். ÷அனைத்துத் துறைகளையும் விட, மருத்துவத் துறைதான் மனிதாபிமானத்தோடு-உடன்பாடு கொண்ட துறையாகும். ஆகவே, அனைவரும் மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு மருத்துவத் துறைப் பணியை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் கருணாநிதி பேசினார். ÷இந்த நிகழ்ச்சியில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். "உடல் நிலை இடம் தரவில்லை' தனக்கு உடல் நிலை இடம் தராவிட்டாலும், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையின் 125-ம் ஆண்டு விழாவில் பேசும்போது அவர் இதைக் கூறினார். அவர் பேசியதாவது: மருத்துவமனைக்கு வருகை தந்ததும், அதற்கேற்ப உடல்நிலையும் சரியில்லை. உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனை விழாவுக்கு வரவில்லை. பிறருடைய உடல்நிலை சரியாக இருக்க வேண்டுமென்ற காரணத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிற மருத்துவமனையின் திறப்பு விழா என்பதால் கலந்து கொண்டுள்ளேன். மேலும், இந்தத் தொகுதியின் (சேப்பாக்கம்) சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனது கடமை. சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் என்கிற நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்ற உடல்நிலை இடம் தராவிட்டாலும், இங்கே வந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக