இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார் என சண்டே லீடருக்கு கூறியதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர், ப்ரெட்ரிக்கா ஜேன்ஸிடம் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, குறுக்கு விசாரணையை தொடர்ந்தும் மேற்கொண்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சண்டே லீடருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் குறிப்பிட்டார்
இதற்கான விளம்பரங்களுக்காக சண்டே லீடர் பத்திரிகைக்கு வாரம் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபா ஐக்கிய தேசியக் கட்சியினரால் செய்தித்தாளுக்கு வழங்கப்பட்டதாக ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்தார்
சண்டேலீடருக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிதி வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிப்படையாக தெரிவித்து வந்த நிலையிலேயே தமக்கும் இந்த விடயம் தெரியவந்ததாக சாட்சி குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா, வெள்ளைக்கொடி விடயம் தொடர்பில் தாம் கேள்விப்பட்ட செய்திகளையே தமக்கு கூறினார் என்பதை தாம் சண்டே லீடர் பத்திரிகையில் 2010 ஜனவரி மூன்றாம் திகதி பிரசுரித்ததாக ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் குறிப்பிட்டார்.
அத்துடன் சரத் பொன்சேகா, தாம் தெரிவித்த கருத்துக்களை அப்படியே பிரசுரிக்குமாறு தம்மிடம் கோரியதாகவும் சாட்சி தெரிவித்தார்
இந்நிலையில் வெள்ளைக்கொடி விடயம் குறித்து சரத் பொன்சேகாவுடனான செவ்விக்காக ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் பயன்படுத்திய குறிப்பு புத்தகம், இன்று நீதிமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது வாதிட்ட பிரதிவாதியான சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, நளின் லதுவாஹெட்டி, சாட்சி சமர்ப்பித்த குறிப்பு புத்தகத்தின் குறிப்பேடு ஒன்றுக்கும் குறிப்பு புத்தகத்துக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாக குறிப்பிட்டார்
இதனையடுத்து, தமது குறிப்பு புத்தகத்தை இரண்டு முறை பார்வையிட்ட சாட்சியான ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ், தமக்கு அவ்வாறான வித்தியாசம் தென்படவில்லை என தெரிவித்தார்
பின்னர் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவும் குறிப்பு புத்தகத்தை பார்வையிட்டது எனினும் கருத்துக்கள் எதனையும் கூறவில்லை
இதன் போது குறுக்கிட்ட, பிரதி சொலிஸிட்டர் நவரட்ன பண்டா, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பொய்யான குறிப்பு புத்தகம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமானால் அதனை இந்த வழக்கு விசாரணைக்கு முன்னரே சமர்ப்பித்திருக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தில் உள்ள ஏடுகள் எவையும் புத்தகத்தில் இருந்து அகன்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனநாயக தேசியக்கூட்டமைப்பி;ன் தலைவர், சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலைக்குள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக