இலங்கையில், கடந்த மூன்று சகாப்த காலமாக சிங்கத்துக்கும் (சிஙகளவர்களுக்கும்) – புலிகளுக்கும் (தமிழர்களுக்கும் ) இடையே நடைபெற்ற மோதல்கள் முடிவடைந்து இப்போ இலங்கையில் மனிதருக்கும், யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
யானையால் உடைக்கப்பட்ட ஒரு வீடு
உலகின் மிகப்பெரிய விலங்கான யானைகளின் முக்கியமான வாழ்விடங்களில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், சுவடு தெரியாமல் இன்னுமொரு பிரச்சினை அங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆளுடன் ஆள் மோதியது முடிந்து, இப்போது ஆனைகளுக்கும், ஆளுக்கும் இடையில் மோதல் நடக்கிறது. மனிதனுக்கும், யானைகளுக்கும் இடையிலான இந்த சண்டை நடப்பது நிலத்துக்காக. இதுவும் ஒருவகை சுதந்திரத்திற்கான போராட்டம்தான். யாணைகள் தங்கள் தங்கள் பிரதேசங்களில் சுதந்திரமாக இயங்குவதற்கு விரும்புகின்றன. ஆனால் மனிதர்கள் அவைகளின் பிரதேசத்தில் சுதந்திர நடமாட்டத்துக்கு இடையூறு செய்கிறார்கள். அதனால் இரு பகுதியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுகின்றன.
இந்தப் மோதல்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாக நேர்கிறது. அது மாத்திரமல்லாமல், இந்த யானை- மனித மோதல்களால் இலங்கையில் மொத்தம் உள்ள 9 மாகாணங்களில் 8 மாகாணங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 5 நாட்களில் 4 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளால் அடிபட்டு இறந்திருக்கிறார்கள்.
நாட்டின் பெரும்பாலும் எல்லாப் பகுதிகளிலும் யானைகள் சுதந்திரமாக நடமாடிவருவதால் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு தீரும் என்று தெரியவில்லை. இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை ஒரு நெருக்கடி என்று வர்ணிக்கிறார்கள்.
மனிதர்கள், யானைகளின் வாழ்விடங்களில் குடியேறிவிட்டார்கள் என்று சுற்றுச் சூழலாய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால், மனிதர்களின் பண்ணைகளில் யானைகள் அத்துமீறி நுழைவதுடன் அவர்களது பயிர்களையும், அவர்களையும் அழிக்க முனைகின்றன.
இது உண்மையில் ஒரு நெருக்கடி நிலை என்கிறார் இலங்கை வன விலங்கு இலாகாவைச் சேர்ந்த ரவி கொரியா .ஆனால், யானைகள் இலங்கையில் இன்னமும் ஒரு கலாச்சார, சமய சின்னமாகவே பார்க்கப்படுகின்றன. வன பாதுகாப்பு சங்கத்தின் உதவியுடன் சில கிராமங்களில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படூகின்றன.
யானையால் உடைக்கப்பட்ட ஒரு வீடு
அதற்காக சில இடங்களில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வேலிகள் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி யானை பயந்து ஓடச்செய்ய உதவும். ஆனால், யானையை அது கொல்லாது.
யானைகளை சுதந்திரமாக மேய்ந்துவர அனுமதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுவதால், அவற்றை சுற்றி அல்லாமல்,கிராமங்களைச் சுற்றியே இந்த வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை இன்னமும் ஒரு முறையும் இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எலி அலர்ட் என்று கூறப்படுகின்றது. அதாவது யானைகள் வந்து இந்த வேலிகளை உடைக்கும் போது, அந்த முறைமை தானாகவே கிராம முக்கியஸ்தர்களின் கைபேசிகளுக்கு டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பும். இதனை அறிமுகப்படுத்தியவர், லங்கா விஜேசிங்க. இது கிராம மக்களுக்கு மேலதிக பாதுககாப்பை வழங்குவதாக அவர் கூறுகிறார்.
இந்த வேலிகளுக்கு பக்கத்தில் பாதுகாப்பாக மரம் ஒன்றில் தங்கும் வாடி வீடுகளையும் சில குடும்பங்கள் அமைத்துள்ளன. வேலி நிலைமைகளை மேம்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
யானைகள் குறித்த அச்சமும், அழிவும் இன்னமும் தொடருகின்றன அதேவேளை கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் யானைகளைப் போற்றும் தன்மையும் இன்னமும் அங்கு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக