அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட முதலீட்டுத் தூதுக்குழுவினர் யாழ்குடாநாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கு இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
முப்பது பேர் அடங்கிய மேற்படி அமெரிக்க வர்த்தக முதலீட்டுத் தூதுக்குழுவினர் நேற்றையதினம் இலங்கை வந்தடைந்த நிலையில் இன்று காலை விமானம் மூலம் பலாலியை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் வைத்து யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரினால் வரவேற்கப்பட்ட அமெரிக்க முதலீட்டாளர்கள் யாழ். பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அச்சமயம் அங்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட அமெரிக்க முதலீட்டு தூதுக்குழுவினரை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சம்பிரயதாயப்பூர்வமாக வரவேற்றதுடன் அதிதிகள் மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயும் மாநாடு ஆரம்பமாகியது. யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில்
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதியும் தூதுக்குழுவின் தலைவருமான மைக்கல் டிலானே வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோர் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி துமிந்த ஆரியசிங்க வடபகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் எனும் தொனிப்பொருளில் விரிவான உரையாற்றினார். சமாதானமின்றி அபிவிருத்தி கிடையாது என்பதை வலியறுத்திய சிவஞானசோதி அவர்கள் புதிய முதலீடுகளை வரவேற்கும் அதேவேளை ஏற்கனவே காணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஒட்டுசுட்டான் மட்பாண்டத் தொழிற்சாலை ஆனையிறவு உப்பளம் போன்ற தொழில்வாண்மைகளை மீண்டும் இயங்கவைக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் வடபகுதி சுற்றுலா அபிவிருத்தி மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய உற்பத்திகள் தொடர்பாகவும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.
மேற்படி சிறப்புரைகளைத் தொடர்ந்து கேள்வி பதில் நேரம் இடம்பெற்றது. அமெரிக்க முதலீட்டாளர்கள் பலரும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து தமது வினாக்களை எழுப்பியபோது அதற்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி முதலீட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி துமிந்த ஆரியசிங்க யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உரிய பதிலும் விளக்கங்களையும் வழங்கினார்கள்.
இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர கைத்தொழில் அபிவிருத்தி சபை பொதுமுகாமையாளர் ஜஸ்மின் மன்னம்பெரும யாழ். வர்த்தக சம்மேளனத்தலைவர் பூரணச்சந்திரன் யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற முதலீட்டு மாநாட்டைத் தொடர்ந்து. தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டு முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிந்தனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வருகைதந்துள்ள இந்த வர்த்தக முதலீட்டுத் தூதுக் குழுவினர் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதுடன் இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய தனியார் வர்த்தகத்துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே முதலீட்டுக் குழுவினரின் வருகை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வடக்கில் முதலீட்டுத்துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வரும்நிலையில் தற்பொழுது அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக