புதன், 13 அக்டோபர், 2010

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவத்தினருக்கும் 20வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்??

கிளிநொச்சி, விசுவமடு பகுதியில் இரு பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்கின் சந்தேக  நபர்களான நான்கு இராணுவத்தினரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில்  வைக்குமாறு  கிளிநொச்சி  நீதிவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் சம்பந்ப்பட்ட இராணுவத்தினரை பிணையில்  விடுவிக்குமாறு  சமர்ப்பிக்கப்பட்ட மனு  மீதான தீர்ப்பை    எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்குவதாகக் கூறிய நீதவான் அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  உத் தரவிட்டார்.
அத்துடன் குறித்த பாலியல் வழக்கு மீதான மேல் விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம்   விசாரணைக்கு   எடுக்கப்பட்டபோது   முக்கிய சாட்சிகளாக   சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் அவரது சகோதரன், பெண்ணின் 10 வயது மகன் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
சகலரின்  சாட்சியங்களும்  பூர்த்தியடைந்ததையடுத்து  படையினர்  சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி  திருமதி கொஸ்வத்த பிணை மணுவைத் தாக்கல் செய்தார்.  வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்து விட்டன. குறிப்பிட்ட நான்கு சிப்பாய்களும் பணியிலிருந்து  தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏதும் வராது.
எனவே அவர்களைப் பிணையில் விடுமாறு அவர் தமது மனுவில் கோரினார்.   இந்த மனுவை ஆட்சேபித்த பாதிக்கப்பட்டோர் சார்பில்  ஆஜரான  சிரேஷ்ட சட் டத்தரணி கே.எஸ். இரட்ணவேல்,  தற்காலிகமாகப் பணியிலிருந்து  இவர்கள் இடை நிறுத்தப்பட்டதாலும் இராணுவத்தினர் என்ற காரணத்தால் மக்களை அச்சுறுத்த வாய்ப்புள்ளது.
மக்கள் மீளக் குடியேறும் நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இவர்கள் பிணையில் விடப்பட்டாலும், மேலும் மீளக்குடியேறும் மக்களை அது பாதிக்கும்.  பாரதூரமான குற்றம் என்பதால்    இதற்கு 20வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.    இந்தத் தண்டனையில் இருந்து தப்புவதற்காக அவர்கள் தலைமறைவாகலாம்.   இந்தக் காரணங்களால்   இவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்கக்கூடாது   என்று   தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
இவற்றை பரீசீலித்த நீதவான் குறித்த இராணுவத்தினரின் பிணைமனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அதுவரை அவர்கள் நால்வரையும் தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: