புதன், 13 அக்டோபர், 2010

அவர்கள் மனம் கோணாத வகையில் செயலாற்றுவதே சிறந்த நிர்வாகம் என் றாகிவிட்டது

கோழியைக் கேட்டு குழம்பு வைக்கும் யாழ்ப்பாணத் தமிழர் நிர்வாகம்!
கோழியைக் கேட்டு குழம்பு வைக்கும் கலாசாரமே தற்போது யாழ்ப்பாணத் தமிழ் நிர்வாகத்திடம் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆளும் தரப்பிடம் கருத்துக் கேட்டு அவர்கள் மனம் கோணாத வகையில் செயலாற்றுவதே சிறந்த நிர்வாகம் என் றாகிவிட்டது.

இம் மனநிலையால் சாதாரண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதற்கு மேலாக சட்டமென்பது சகலருக்கும் சமம் என்ற தத்துவத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம்.சிங்கள மக்கள் என்றால் அவர்களுக்கே முன்னுரிமை என்ற நினைப்பு.இந்த நினைப்புக்கும் அரசுக்கோ அன்றி சிங்கள மக்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.மாறாக உயர் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ்ப் பெருந்தகைகளின் மனப் பயமும் மனப் பிரமையுமே இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமாகும்.
“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ…” என்று கேட்கும் கம்பனின் வீரம் நமக் கும் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.அந்த வீரம் இனப்பற்றிருக்கும் போதே ஏற்பட முடியும். இதுபற்றி எல்லாம் இவ்விடத்தில் குறிப் பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படமாட்டா தென் பதால் அதனை அப்படியே விட்டு விடலாம்.
ஆனால் ஒரு விடயத்தைச் சொல்லித்தானாக வேண்டும். யாழ்.குடாநாட்டிற்கு வருகை தருகின்ற தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களையும் சென்று பார்வையிடு கின்றனர்.மந்திரிமனை,நல்லூர் முருகன் ஆலயம், கோட்டை, நயினை நாகபூ­ணி அம்மன் ஆலயம், வல்லிபுரம், கந்தரோடை இப்படி அவர்கள் பார்வையிடும் இடங்களின் பட்டோலையில் யாழ். பொது நூலகமும் இடம்பெற்றுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களால் எரிக்கப்பட்ட யாழ்.பொது நூலகத்தை பார்வையிடுவதால் ஒரு மன ஆறுதல் அவர்களுக்கு இருக்குமாயின் பர வாயில்லை. பொது நூலகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அவர்களோ பொது நூலகத்தின் வாசிப்புப் பகுதி, இரவல் கொடுக்கும் பகுதி என சகலதையும் சுற்றிப் பார்வையிடுகின்றனர்.
எப்படி இருக்கின்றது நிலைமை. அங்கத்துவப் பணம் செலுத்தி உறுப்புரிமை பெற்றால் அன்றி பொது நூலகத்திற்குள் நுழைவது ஆகாது என்ற நிலை இருக்கும்போது இவர்களோ நூற்றுக் கணக்கில் நூலகத்திற்குள் நுழைவதும் பார்வையிடுவதும் மட்டுமன்றி சில புத்தகங்களை தம்மோடு எடுத்துச் செல்வதுமான துயரம் நடக்கின்றனவாம்.
இதைவிட நூலகத்தைப் பார்த்து இது கண் காட்சியா,இந்தப் புத்தகங்கள் விற்பனைக்கா வைக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளால் தலை விறைத்துப் போகின்றதாம்.எல்லாம் எங்கள் பல வீனமேயன்றி வேறெதுவுமில்லை.நூற்றுக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் கொழும்புக்குச் சென்று கொழும்பு நூலகத்தை இப்படி பார்வையிட முடியுமா என்று ஒரு கணம் சிந்தித்தால் ஒரு போதும் நடக்காதென்பதே பதிலாகும்.
அப்படியானால் அந்தச்சட்டத்தை நாமும் நடைமுறைப்படுத்த யாரிடம் கேட்கவேண்டும். கோழியைக் கேட்டு குழம்பு வைக்க நினைத்தால் அதோ கதிதான்.
நன்றி: வலம்புரி

கருத்துகள் இல்லை: