வெள்ளி, 15 அக்டோபர், 2010
இலங்கையில் ஆண்,பெண் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவது மிக உயர்ந்த மட்டத்தில்
உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றிலும் பார்க்க இலங்கையில் ஆண்,பெண் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. உலக பொருளாதார அமைப்பின் சர்வதேச பால்நிலை இடைவெளி தொடர்பான 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் பிரகாரமே இந்த விபரம் வெளிவந்திருக்கிறது. உலக பால்நிலை இடைவெளி சுட்டியில் இலங்கை 16 ஆவது இடத்தில் உள்ளது.அமெரிக்கா 19வது இடத்திலும் கனடா 20 ஆவது இடத்திலும் உள்ளன. நான்காவது வருடமாக தொடர்ந்து முதல் 20 இடங்களுக்குள் இலங்கை இருந்து வருகிறது விசேடமாக குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். கல்வி, சுகாதார விடயங்களில் சராசரி நிலைமையிலும் பார்க்க இலங்கை உயர்மட்டத்தில் இருக்கிறது. அரசியல் ரீதியான அதிகாரமளிக்கப்படும் விடயத்திலும் சிறப்பான நிலைமையில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு,தென்கிழக்காசியப் பிராந்தியத்திலும் இலங்கையிலும் பார்க்க ஆண்பெண் பால்நிலை சமத்துவத்தை பேணுவதில் பிலிப்பைன்ஸ் உயர் மட்டத்தில் (9ஆவது இடம்) உள்ளது. வடதுருவ நாடுகளான ஐஸ்லாந்து (1), நோர்வே(2), பின்லாந்து(3), சுவீடன்(4) என்பன தொடர்ந்து முன்னணியில் உள்ளன.அயர்லாந்து 6ஆவது இடத்திலும் சுவிட்சர்லாந்து 10ஆவது இடத்திலும் ஸ்பெயின் 11ஆவது இடத்திலும் ஜேர்மனி 13ஆவது இடத்திலும் பிரிட்டன் 15ஆவது இடத்திலும் உள்ளன. 134நாடுகள் மத்தியில் இந்த உலக பால்நிலை இடைவெளி சுட்டெண் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்கள் தொகையின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வளங்கள், வாய்ப்புகள் பகிரப்படுகின்றன என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு இச்சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பங்களிப்பு, வாய்ப்பு, சம்பளம் பங்களிப்பு மட்டம், உயர்மட்ட தேர்ச்சிபெற்ற வேலைவாய்ப்பு, அடிப்படை மற்றும் உயர்கல்வி அடைவுமட்டம், தீர்மானம் எடுத்தல் தொடர்பான அரசியல் அதிகாரம், ஆயுள்கால எதிர்பார்ப்பு தொடர்பான சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சுட்டெண் மதிப்பிடப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக