நாட்டில் அரசாங்கம் செய்யும் துரோகச் செயல்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஒரு போதும் மன்னிப்பு கிடைக்காது. எனவே அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை அதிகரிக்கும்போது அதற்கான பின் விளைவுகளை பொது மக்களிடமிருந்து சந்திக்க நேரிடும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவோ அவரது குடும்பத்தாரோ அல்லது கட்சி உறுப்பினர்களோ ஒரு போதும் அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. ஆனால் அரசாங்கத்தால் தொடர்ந்தும சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திய விஜித்த ஹேரத் எம்.பி. கூறுகையில்,.
“கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் மேலோங்கி காணப்பட்டன. யுத்தத்தின் பின்னரும் இந்நிலை மாற்றமடையவில்லை. நாடு தொடர்பாக அல்லது மக்கள் தொடர்பான சிந்தனைகளில் இருந்து விலகி சுயநல போக்குடனேயே அரசு செயற்பட்டது. இதனால் நாட்டில் பாரியளவிலான ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.
பொது மக்களுக்கு அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளாகி விட்டன. 2500 ரூபா சம்பள உயர்வு, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்திற்குள் மீள் குடியமர்த்தல் உட்பட இன்னோரன்ன வாக்குறுதிகளை மறந்தும் மீறியும் அரசாங்கம் செயற்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சரத் பொன்சேகாவை சிறை வைத்து கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளதுடன் தான் எவ்விதமான தவறும் செய்யாத நிரபராதியைப் போல் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் தவறுகளைப் பட்டியலிட்டால் மன்னிப்பே வழங்க முடியாது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக