செவ்வாய், 12 அக்டோபர், 2010

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது சந்தேகம்

இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் விசாரணையில் சிலர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது தமது சந்தேகங்களை வெளியிடும் வகையில் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி நாள் அமர்வு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனவர்கள் தொடர்பாக மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தமது சாட்சியங்களை பதிவு செய்து கொண்டனர்.

சாட்சியமளித்தவர்களில் பலர் காணாமல் போனவர்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரைத் தொடர்புபடுத்தியிருந்தனர். அடையாளம் தெரியாத ஆட்கள் என்று குறிப்பிட்டு ஒரு சிலர் தமது சாட்சியங்களில் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால் வேறு சில சாட்சிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சந்தேகம் தெரிவிக்கும் விதமாக வாக்குமூலம் வழங்கினர் என பிபிசி அறிக்கை தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுடரொலியின் தயார் மாரிமுத்து இரத்தினசிகாமனி சாட்சியமளிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய தமது மகனை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் அழைத்துச் சென்றார்கள், அவர்களை விசாரித்தால்தான் காணாமல் போன தமது மகன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த எச்.எம். முபீன் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் திகதி தனது தொழிலின் நிமித்தம் ஏறாவூரிலிந்து மோட்டார் சைக்கிளில் கறுவாக்கேணிக்கு சென்ற தனது தந்தை தொடர்பாக எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என்று தெரிவித்தார்.

எனது தந்தைக்கு தொழில் ரீதியாக அறிமுகமான தமிழர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினரே தனது தந்தையை கடத்திச் சென்றுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெருகல் சிறீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான இராசையா ஞானகணேசன், எமது பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வேளை ஆயுத முனையில் விடுதலைப் புலிகளினால் ஆலய பாரம்பரிய நிர்வாக முறை மாற்றி அமைக்கபட்டது என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பாரம்பரிய முறையில் ஆலய நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: