ஐ.நா சபை: இந்தியாவின் பெருமைக்குரிய தலைமகனாகப் போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்ததாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இதுதொடர்பாக ஐ.நா. இணையதளத்தில் எந்த தகவலும் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு, வெளிநாட்டு உதவிகளுக்காக காத்து நின்ற இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம்.
பொக்ரான் அணு குண்டு வெடிப்புச் சாதனைகளில் முக்கியப் பங்காற்றியவர்.
இந்தியாவின் முதல் சுய தொழில்நுட்ப செயற்கைக்கோளான எஸ்எல்வியை வடிவமைத்த பெருமையும் இவருக்கே சொந்தம்.
2002 முதல் 2007 வரை இந்தியாவின் மகா எளிமையான குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் கலாம். வெட்டி செலவு, பந்தாவில் நம்பிக்கையில்லாத இந்த மனிதர், குடியரசுத் தலைவரான தன்னைப் பார்க்க வந்தவர்களைச் சந்திக்க மறுத்ததில்லை.
மாணவர்களுக்கு மிகப் பிடித்தமான ஒரே தலைவர் டாக்டர் கலாம்தான் என்று சொல்லும் அளவுக்கு மாணவர்கள் மத்தியிலேயே எப்போதும் இருந்து வருகிறார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்நாள் முழுவதையும் மாணவர்களின் கல்விக்காக, அவர்களின் முன்னேற்றுத்துக்காகவே செலவிட்டு வருகிறார் இந்த 79 வயது பிரம்மச்சாரி!
உலகம் முழுவதும் 1 கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியுள்ள இந்த மாமேதையை கவுரவிக்கும் வகையில் ஐநா சபை, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஐ உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளதாக இன்று செய்திகள் பரவின.
இருப்பினும் இதுதொடர்பாக ஐ.நா. சபை எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ஐ.நாவின் சிறப்பு நாட்கள் குறித்த பட்டியலிலும் இதுகுறித்த தகவல் ஏதும் இல்லை. எனவே கலாம் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக