புதன், 13 அக்டோபர், 2010

குறைந்த கட்டணத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை: "கல்லீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மியாட் மருத்துவமனை நிபுணர் குழுவின் கூட்டு முயற்சியாக, குறைந்த கட்டணத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என மியாட் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் மோகன்தாஸ் கூறினார். இந்தியன் சொசைட்டி ஆப் கேஸ்ட்ரோ எண்ட்ரோலஜியின் தமிழக பிரிவும், மியாட் மருத்துவமனையும் இணைந்து குடலியல் சம்பந்தமான கருத்தரங்கம் ஒன்றை மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் நடத்தின. இதில், 300க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்றுனர்களுக்கும் உதவும் வகையில் குடலியல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு அளிக்கப்படும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக மியாட் இரைப்பை குடலியல் துறையில் புதிதாக இணைந்துள்ள குழு ஒன்றில், முன்னணி ஜி.ஐ., இன்டர்வென்ஷனல் என்டோஸ்கோபிஸ்ட், ஒரு ஹீபடாலஜிஸ்ட், ஒரு கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட், ஒரு குழந்தைகளுக்கான கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினரை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் இரைப்பை குடலியல் துறை தலைவர் பேராசிரியர் ஜார்ஜ் சாண்டி வழிநடத்துகிறார். கல்லீரல் நோய் சிகிச்சைகள் குறித்து மணப்பாக்கம், மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பேராசிரியர் மோகன்தாஸ், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் இரைப்பை குடலியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஜார்ஜ் சாண்டி, இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர் எல்வின் எலியாஸ், ஆஸ்திரேலிய நிபுணர் இயான் ராபர்ட் தாம்சன், டாக்டர் குமார் ஆகியோர் கூறியதாவது:
இந்தியாவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன. கல்லீரல் கொழுப்பு நோய்களால் 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுப்பழக்கம், ஹெபடைடிஸ் ஏ, பி, சி ஆகிய நுண்ணுயிரிகள் தொற்று ஆகிய காரணங்களால் கல்லீரல் நோய்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில் 4 சதவீதம் பேர் ஹெபடைடிஸ் "பி'யாலும், 1 சதவீதம் பேர் "சி'யாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கல்லீரல் நோய்கள், நோயாளிகளிடம் அதற்கான அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கும். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிப்பது சிரமமாகிவிடுகிறது. தடுப்பூசி மூலம் ஹெபடைடிஸ் பரவுவதை தவிர்க்கலாம். கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், ஹெபடைடிஸ் தடுப்பூசி விலை அதிகம். தற்போது இந்தியாவிலேயே தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுவதால், ஒரு டோஸ் 15 ரூபாய்க்கு கிடைக்கிறது. கல்லீரல் நோய் தொடர்ந்து அதிகரிக்கும் போது, சிரோசிஸ் மற்றும் இறுதி நிலையை அடைகிறது. அதுபோன்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாற்று கல்லீரல் பொறுத்துவது மட்டுமே தீர்வு. சமீபத்திய ஆய்வில் ஐந்து லட்சம் பேர் கல்லீரல் நோயின் சிரோசிஸ் நிலையில் உள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் நோயின் இறுதி நிலையை அடைந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக உள்ளனர். இந்தியாவில் ஒரு சில மையங்களில் மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். மியாட் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் நோய்கள் துறையில் புதிதாக இணைந்துள்ள குழுவினரின் முயற்சியால், 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் செலவிற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்ய முடியும். இதற்கான மையத்தை 15 கோடி ரூபாய் செலவில் மியாட் அமைத்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழு நாட்களில் நோயாளி 90 சதவீதம் குணமடைவார். ஆறு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பலாம். பொதுவாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆயிரம் நோயாளிகளில் 75 சதவீதம் பேர் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், 60 சதவீதம் பேர் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். இது நோயாளியின் <உடல்நிலையை பொறுத்தது. இதுமட்டுமல்லாமல், ஜிஐ பித்தப்பை மற்றும் கணையம் தொடர்பான பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி சிறுதுளை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுகுடல் தொடர்பான பிரச்னைகளுக்கு கேப்ஸ்யூல் எண்டோஸ்கோப்பி என்னும் புதிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

கருத்துகள் இல்லை: