திங்கள், 11 அக்டோபர், 2010

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலையொன்றில் பதற்றத்தை ஏற்படுத்திய இலங்கையர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டுப் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேளைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 3000 இலங்கையர்கள் தொழில்புரியும் இந்த தொழிற்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டிருந்த போதும் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்ட இந்தோனேசிய நாட்டவர்களுடன் இலங்கையர்கள் மோதலில் ஈடுபட்டதுடன், அவர்களை இடமாற்றம் செய்யுமாறுக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதனால் இலங்கையர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம், குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றும் அனீல் எனப்படும் இலங்கையரை இடமாற்றம் செய்யுமாறுக் கோரி இலங்கையர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை வெளிநாட்டு வேளைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னர் குறித்த இலங்கையர் இடமாற்றம் செய்யப்பட்டும், அவரை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்புமாறு வலுயுறுத்தி இலங்கையர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே ஜோர்தான் பொலிஸார் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகித்து அவர்களை அகற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: