இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய இரண்டாண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர் என்று சாடியுள்ளார் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா யாரோ எழுதிக் கொடுத்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு கலைஞர் அரசின் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.
இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதைப் பின்வரும் புள்ளி விவரப்படி அவரும் புரிந்து கொள்ளலாம். பொது மக்களும் தெரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2005 - 2006ல் லாபம் ஈட்டிய கைத்தறி சங்கங்கள் 760, அவற்றின் விற்பனை மதிப்பு ரூ719 கோடி மட்டும். ஆனால் கலைஞர் ஆட்சியில் 2009-10ல் 946 கைத்தறி சங்கங்கள் லாபம் ஈட்டியுள்ளன. விற்பனை மதிப்பும் ரூ.911 கோடியாக உயர்ந்துள்ளது.
2005-2006ல் 79 விசைத்தறி சங்கங்கள் மட்டும் லாபத்தில் இயங்கின. ஆனால் 2009-2010ல் 126 விசைத்தறி சங்கங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற 5 கூட்டுறவு நூற்பாலைகளும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும், ஈரோட்டில் இயங்கி கொண்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையும் லாபத்தில் இயங்கி வருகின்றன.
இலவச வேட்டி சேலைத்திட்டத்தில் "டெண்டர்" முறையே தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை நெய்வதற்காக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் வழங்கப்பட்டு வருகிறது.
துறை அதிகாரிகள் அடங்கிய நூல் விலை நிர்ணயக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்குத் தேவைப்படும் அனைத்து ரக நூல்களின் விலையையும் நிர்ணயம் செய்கிறது.
இந்த ஆண்டு 10.05.2010ல் கூட்டுறவு நூற்பாலைகளிலிருந்து இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக விசைத்தறிகளுக்கு வழங்கும் நூலான 40 நம்பர் கோன் நூலுக்கான விலையினை 5 கிலோவிற்கு ரூ 840-ம் மதிப்பு கூட்டுவரியும் சேர்த்து மொத்தம் ரூ 873.60 ஆகஅக்குழுவே நிர்ணயம் செய்தது.
இலவச வேட்டி சேலை திட்டம் பொங்கல் 2011க்கு தேவையான நூல்களை கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் பெறுவதற்கும், கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் கிடைக்கும் நூல் போக மீதியை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு 06.07.2010 அன்று டெண்டர் கமிட்டி கூடி 40 நம்பர் நூல் 5 கிலோவிற்கு ரூ.950/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் மதிப்பு கூட்டுவரி, காப்பீடு, போக்குவரத்து செலவு, நூல் தர பரிசோதனை கட்டணம் ஆகியவை அடங்கும்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் பதவியையும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் பதவியையும் ஒருவரே வகிப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் ஒருவரே இரு பதவிகளையும் பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். இருப்பினும் நூல் விலை நிர்ணயக் குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுவில் வெவ்வேறு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுக்களில் அரசு கைத்தறித்துறை, அரசு நிதித்துறை மற்றும் மத்திய அரசு நிறுவன அதிகாரிகளும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநரும் பங்கு பெற்றுள்ளனர்.
10.05.2010க்கும் 06.07.2010க்கும் இடைப்பட்ட இரண்டு மாத காலத்தில் பஞ்சு விலை ஏற்றத்தின் காரணமாக நூல் விலை அதிகரித்து இருந்தது. தற்போதும் நூல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நூல் விலை நிர்ணயம் செய்யும்போது சம்பந்தப்பட்ட இரக நூலின் சந்தை விலை, தேசிய கைத்தறி வளர்ச்சிக்கழகத்தின் விலை, ஈரோடு மற்றும் சேலம் சந்தை விலை விவரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், வெளிச்சந்தை கொள்முதல் என்பது உடனடி ரொக்க பட்டுவாடா அடிப்படையிலானது.
அது விலைப்புள்ளி அளித்த அன்றைய ஒரு நாளைய விலை ஆகும். ஆனால், ஒப்பந்தப்புள்ளி மூலம் பெறப்படும் நூல்களின் விலை 200 நாட்களுக்கு ஏற்புடையதாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். மேலும் கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு 30 நாட்கள் காலக்கெடுவில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யும் பட்சத்தில் ஏற்றி இறக்கும் கூலி, வண்டி வாடகை, காப்புறுதி போன்ற இதர செலவுகள் ஏற்க வேண்டியுள்ளது.
இவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நூல் சந்தையில் நிலவும் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டும், ஒப்பந்தப்புள்ளி ஏற்புக்குழு, ஒவ்வொரு இரகத்திலும் குறைந்தபட்ச விலை அளித்த ஒப்பந்ததாரர்களுடன் பல நிலைகளில் பேச்சு வார்த்தை நடத்தி, விலை குறைப்பு செய்து ஏகமனதாக டெண்டர் கமிட்டி முடிவு எடுத்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்தது.
நூல் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அக்டோபர் 2010 வரை ரூ.950/- விலைக்கே நூல் வழங்கிட வேண்டும். டெண்டர் கமிட்டி முடிவு செய்துள்ள விலையான 5 கிலோ ஒன்றுக்கு ரூ.950/- தான் இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைக்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூலுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தமுறைதான் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. கூட்டுறவு நூற்பாலைகள் வழங்கும் நூலுக்கு குறைந்த விலையும் டெண்டர் மூலம் பெறப்படும் நூலுக்கு அதிக விலையும் எப்போதும் வழங்கப்படவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் ஒரே முறை 2004ம் வருடம் மட்டும் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2007ல் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2008-ஆம் ஆண்டில் 10 சதவிகித கூலி உயர்வும்; 2009-ஆம் ஆண்டு 15 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2010ல் 10 சதவிகித அடிப்படை கூலி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டில் கைத்தறி சேலைக்கு ரூ45ஆக இருந்த கூலியை உயர்த்தி; தற்போது ரூ68.22 ஆகவும்; கைத்தறி வேட்டியின் கூலியை ரூ.42.13 ஆக இருந்த கூலியை ரூ.58.06ஆக உயர்த்தியும்; விசைத்தறி சேலைக்கு 2005-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.21.42ஐ, தற்போது ரூ.28.16ஆக உயர்த்தியும்; விசைத்தறி வேட்டிக்கு ரூ.12.38ஆக இருந்ததை ரூ.16 ஆக உயர்த்தியும் கலைஞர் அரசு வழங்கியுள்ளது.
"சைசிங்" பணிக்கும் முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இதற்காக அமைக்கப்பட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளியும் தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றியே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் 20 சைசிங் ஆலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சைசிங் பணிகள் முறையாக செயல்பட்டு வருகிறது. சைசிங் பணிகளின் தரத்தை கண்காணிக்க ஒரு சைசிங் ஆலைக்கு மூன்று அலுவலர்கள் வீதம் நியமிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெண்டர் கமிட்டி மூலம் கொள்முதல் செய்யப்படும் நூல்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெக்ஸ்டைல் கமிட்டி தர பரிசோதனை கூடங்களிலும் மற்றும் விசைத்தறி சேவை மைய தரப்பரிசோதனை கூடத்திலும் தர பரிசோதனை செய்யப்பட்டு தரமான நூல்கள் மட்டுமே உற்பத்திக்கு வழங்கப்படுவதோடு தரம் குறைவாக கண்டறியப்பட்ட நூல்கள் நிராகரிக்கப்படுகிறது.
மேலும், உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி சேலைகள் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்ககளிலுள்ள தரப்பரிசோதனையாளர்களால் தரப்பரிசோதனை செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் சோதனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்தமையங்களில் மீண்டும் ஒரு முறை அனைத்து தர அளவீடுகளையும் ஆய்வு செய்து தரமான வேட்டி சேலைகள் மட்டும் விநியோகத்திற்கு தேர்வுசெய்யப்படுகிறது.
இத்தோடு நின்று விடாது மேலும் தரத்தை உறுதி செய்வதற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டாம்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கு தரம் உறுதி செய்த பின்னரே மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு தரமான நூலால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான வேட்டி சேலைகள் மட்டுமே இறுதியாக பொதுமக்களின் விநியோகத்திற்குச் செல்கின்றன.
இத்திட்டத்திற்கு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11000 கைத்தறிகளும், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்ளைச் சார்ந்த 41000 தறிகளும் ஈடுபடுத்தப்பட்டு டிசம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு வழங்கி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய இரண்டாண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது ஜெயலலிதாவிற்கே பொருந்தும் என்று கூறியுள்ளார் ராமச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக