திங்கள், 11 அக்டோபர், 2010

வீரமணி: மன்னிக்க வேண்டும். நீ பறையன், நீ கீழ்ஜாதிக்காரன், நீ நடராஜரை தரிசிக்க வேண்டுமானால்

தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் கலைஞர் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
கீழ்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நம்முடைய சகோதரர்களை எவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதற்கு அடையாளம் எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தால் கூட, நாத்திகனாக இருக்க வேண்டிய அவசிய மில்லை. கடவுளை மறுக்கிறவனுக்காக தண்டனை என்று சொன்னால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை பக்திக்காகவே வைத்திருக் கிறார்களே, அந்த நந்தன் சரித்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
பக்கத்திலே இருக்கிறது சிதம்பரம். இப்பொழுது ரயிலில் ரொம்ப சீக்கிரம் போகலாம். ஆனால் அன்றைக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போக முடியாது.
தில்லைக்குப் போவது ஏதோ வானவெளிப் பயணம் மாதிரி ஒரு மிகப்பெரிய இலக்கு அந்தக் காலத்தில். ஆனால் இன்றைக்கு இந்த மண்டலத்திற்குப் போகலாமா? அந்த மண்டலத்திற்குப் போகலாமா என்று ஆராய்ந்து கொண்டிருக் கிறார்கள். தில்லை சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டுமென்பது கதைப்படி நந்தனுக்கிருந்த மிகப்பெரிய ஆர்வம்.
தரிசனம் செய்ய தீட்சிதர்கள், அய்யர்கள் விடவில்லை. கோயிலுக்கு நிலம் எப்படி வந்தது? நம்முடைய மன்னர்கள் செய்த வேலை. மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களாகக் கொடுத்தார்கள். இறையிலி நிலங்களாகக் கொடுத்தார்கள். மன்னர்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து வரிகூட கட்ட வேண்டாம் என்று அப்படியே கொடுத்தார்கள்.
உத்தமதானபுரங்கள்
அப்படியெல்லாம் உருவாகித்தான் இன்றைக்கு உத்தமதானபுரங்கள் இருக்கின்றன. சதுர்வேதி மங்கலங்கள் இருக்கின்றன. நந்தன் தில்லைக்குச் சென்று நடராஜரை வழிபடவேண்டும் என்று சொல்லுகின்றார். அவரை அனுப்பக்கூடாது என்பதற்காக ஒரு நிபந்தனை போடுகிறார் அவருடைய எஜமானன்.
அவ்வளவு வயலிலும் உள்ள நெல்லை விளைய வைத்து விட்டுச்செல்ல வேண்டும் என்று சொல்லுகின்றார். பார்ப்பனர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் வேறு கிடையாது.
கல்நெஞ்சப் பார்ப்பான்
அன்றைக்கே எழுதி வைத்துவிட்டார்கள்-காகத்தையும் படைத்து கல்நெஞ்சப் பார்ப்பானையும் ஏன் படைத்தாய்? என்று. படைத்தானா? இல்லையா? என்பது அப்புறம்.
நந்தன் கவலையோடு படுக்கச்செல்கின்றார். கனவில் நடராஜரை வேண்டிக்கொள்கின்றான். பொழுது விடிந்து பார்த்தால் அவ்வளவு நிலமும் விளைந்து போய்விட்டது.
நந்தன் சிதம்பரத்திற்குப் போய் அங்கு நடராஜர் பெருமானை தரிசிப்பதுதான் அவருடைய நோக்கம். கடவுள் பக்தியைப் பற்றி நினைக்கின்ற பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏன் தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார்? ஏன் கடவுள் மறுப்பாளர்கள் வந்தார்கள் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.
முதல்வர் கலைஞரின் சாதனை
தில்லைவாழ் அந்தணர்கள், தீட்சிதர்கள் சிதம்பரம் கோயில் எங்களுக்கே உரியது என்று ஆணவத்தோடு சொன்னார்கள்.
காலம் காலமாக இருந்த ஆணவத்தை, அந்த தீட்சிதர்களின் ஆதிக்கத்தை முறித்து அது இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறைக்கு உரியதுதான் என்று ஆக்கிய பெருமை வரலாற்றிலே முதல்வர் கலைஞர் அவர்களுடைய சாதனைகளிலே தலை சிறந்த சாதனை.
இன்றைக்கும் உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லாடிக் கொண்டிருக்கின்றான். ஆனால் நடராஜர் பெருமான் காலைத் தூக்கியவர் அப்படியே நிற்கிறார். இன்னும் அவர் காலை கீழேகூட போடவில்லை. கொடுமைக்கார தீட்சிதர்கள்
தீட்சிதர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள்? ஜாதியை சொல்லுவதற்காக மன்னிக்க வேண்டும். நீ பறையன், நீ கீழ்ஜாதிக்காரன், நீ நடராஜரை தரிசிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
நீ உயர்ந்த ஜாதி ஆனால்தான் கடவுளை வணங்கமுடியும். அப்பொழுதுதான் கடவுளைப் பார்க்க முடியும் என்று வைத்திருக்கின்றான். மனுதர்மத்தில் இதைத்தான் எழுதி வைத்திருக்கின்றான். சூத்திரனுக்கு கடவுளைத் தொழ உரிமையே இல்லை என்று எழுதி வைத்திருக்கின்றான்.
இதுதான் மனுதர்மத்தில் மிகத் தெளிவாக இருக்கின்ற வாசகம். அதனால்தான் சம்பூகன் கடவுளைப் பார்க்கத் தவம் செய்தான் என்று தெரிந்தவுடன் அவனை வாளால் வெட்டிக் கொன்றான் என்பது கதை. கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்? நந்தா தீக்குளித்துவிட்டு வா என்று சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை: