திங்கள், 18 அக்டோபர், 2010

ரூபா 2 கோடி கப்பப் பணத்துடன் தப்பியோடுவதற்கு முனைந்த குழு பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு

ரூபா இரண்டு கோடி கப்பம் கோரி  வர்த்தகர் ஒருவரையும் அவரது மகனையும் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக  நபர்கள் மூவரை கொழும்பு   குற்றத்  தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் வசமிருந்த கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள பிரபல நகைக் கடையொன்றின் உரிமையாளரான வர்த்தகரும் அவரது மகனும் கொட்டாஞ்சேனையிலிருந்து  ஆமர் வீதி நோக்கி வந்துகொண்டிருக்கையில், கூட்டுறவு வைத்தியசாலைக்கருகில் வைத்து இனந்தெரியாத குழுவினர் கடந்த புதன்கிழமை காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: குறித்த வர்த்தகர் தனது மகனை கொட்டாஞ்சேனையிலுள்ள தமது வீட்டிலிருந்து பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இந்நிலையிலேயே மேற்படி குழுவினர் அவர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்ததுடன், ரூபா இரண்டு கோடி பணம் வழங்க வேண்டுமெனவும்  இன்றேல்  படுகொலை  செய்யப்படுவார்கள்  எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வர்த்தகர் கடத்தல் காரர்களிடம் இரண்டுகோடி ரூபாவை கப்பமாக வழங்க சம்மதித்ததையடுத்து, சில மணி நேரத்தில் அவர்களது தொடர்மாடி மனைக்கருகில் வர்த்தகரின் மகனை விடுவித்துள்ளனர்.   அதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தகரையும் அன்றிரவே விடுவித்துள்ளனர்.
இதேவேளை, மறுநாள் வியாழக்கிழமை கப்பத்தொகையை வர்த்தகரின் மாமனார் சிகிச்சைப் பெற்றுவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்குமாறும் தாங்கள் அங்கு வந்து பெற்றுக் கொள்வதாகவும் குறித்த குழுவினர் கூறியுள்ளனர்.   இந்நிலையில் வர்த்தகர் குறித்த பணத் தொகையுடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.     அங்கு காலை 10.30 மணிக்கு பணத்தை ஒப்படைப்பதென இணங்கப்பட்டது.   இதற்கு  முன்னதாகவே இவ்விடயம் குறித்து அறிந்த குற்றப்புலனாய்வு  பிரிவினர்  அவ்விடத்திற்குச் சென்று இந்தக் குழுவினரை கைது செய்ய தயார் நிலையில் இருந்துள்ளனர்.
இதேவேளை, அந்த கடத்தல் குழுவைச் சேர்ந்த ஐவர் கப்பப் பணத்தைப் பெறும் வகையில் வைத்தியசாலைக்கு வந்ததுடன் இருவர் வைத்தியசாலை வாசலிலும், இருவர் வைத்தியசாலை மண்டபப் பகுதியிலும்   நிற்க ஐந்தாமவர் கப்பப் பணத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.
இவ்வேளை, அக்குழுவினர் குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பிச் செல்ல முற்படுகையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்படி ஐவரையும் கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால்  மூவரை மாத்திரமே அவர்களால் கைது செய்ய முடிந்தது.  ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தை இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரின் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழுவினரே மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.   இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக  நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: