கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகின்றார்கள்
இனப் பிரச்சினை சிலரின் அரசியல் இருப்புக்கு வசதியான விடயமாக இருந்து வருகின்றது. இவர்கள் தமிழ் மக்களின் வாக்கு வங்கியைத் தங்களுக்குச் சாதகமாக வைத்திருப்பதற் காக இனப்பிரச்சினை பற்றி அடிக்கடி பேசுவார்கள். ஆனால் பிரச்சினையின் தீர்வுக்காக உருப்படியாக எதுவும் செய்ய மாட்டார் கள். ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தப் பட்டியலில் அடங்குகி ன்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இன்றைய அரசாங்கத்துக்கு எதிராக அடிக்கடி முன்வைக்கும் குற்றச்சாட்டுக ளுள் இனப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதும் ஒன்று. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக அரசாங்கம் எதுவும் செய்ய வில்லை என்று அண்மையிலும் ஒன்றும் தெரியாதவர் போலக் கூறினார். இப்போது அக்கட்சியின் நியமன உறுப்பினர் டீ. எம். சுவாமிநாதனும் இதே தொனியில் பேசுகின்றார். கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இவர் தெரிவித்த கருத்துகளின் ஒட்டுமொத்தமான அர்த்தம் இனப் பிரச்சினை யின் தீர்வுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதும் எதுவும் செய்ய மாட்டாது என்பதுமாகும். ரணில் விக்கிரமசிங்ஹ காலத்துக்குக் காலம் வெளியிடும் அறிக்கைகளைப் போலவே சுவாமிநாதன் கூறிய கருத்துகளும் தமிழ் மக்களின் வாக்குகளை இலக் காகக் கொண்டவை.
கண்ணாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அடுத்தவர்களை நோக்கிக் கல்லெறியக் கூடாது எனக் கூறுவர். இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது மிகவும் பொருத்தமான கூற்று. இனப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்று அரசாங்கத்தின் மீதோ தீர்வுக்காகச் செயற்படவில்லை என்று வேறெந்தக் கட்சியின் மீதோ குற்றஞ்சாட்டுகின்ற அரசியல் கட்சி தீர்வுக்கான திட்டமொ ன்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் ஐக்கிய தேசி யக் கட்சியிடம் எந்தத் திட்டமும் இல்லை. வெளிப்படையாகப் பேரினவாதம் பேசுகின்ற கட்சிகளைத் தவிர்த்து மற்றைய எல்லாக் கட்சிகளுக்குள்ளும் எந்தக் காலத்திலும் இனப் பிரச்சினைக்கான திட்டமொன்றைக் கொண்டிருக்காத ஒரேயொரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீர்வைக் குழப்பும் வகையில் செயற்படுவதே ஐக்கிய தேசியக் கட்சி ஆற் றிய பணி. இதற்கு உதாரணங்கள் கூறப்புகுந்தால் அது நெடும் பட்டியலாகிவிடும்.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகி ர்வுத் தீர்வுத்திட்டம் இனப் பிரச்சினைக்குச் சிறந்ததொரு தீர்வு. அந்தத் தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வராமற் போனதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். இவ்விடயத்தில் இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்திருக்கின்றன என்பதற்குப் பிந்தியகால துயர நிகழ்வுகள் சான்று.
மாற்று அரசாங்கம் அமைக்கும் சாத்தியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போதைக்கு இல்லாத போதிலும் மாற்று அரசாங்கம் அமைக்கும் இலக்குடன் அக்கட்சி செயற்படுவதால், இனப் பிரச்சினைக் கான அதன் தீர்வுத் திட்டத்தை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு அதற்கு உண்டு. அதைச் செய்யாமல் மற்றவர்களை விமர்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களல்ல தமிழ் பேசும் மக்கள்.
(தினகரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக