அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரின் ஹெடிங்லே மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88 ஓட்டங்களுடன் சுருண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 349 ஓட்டங்களைக் குவித்தது. எனினும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களே தேவைப்பட்டன.
போட்டியின் மூன்றாவது நாளான நேற்று மாலை ஆட்டமுடிவின்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று சனிக்கிழமை மேலும் 40 ஓட்டங்களே தேவையான நிலையில் துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீரும் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வட்ஸனும் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக