புதன், 28 ஜூலை, 2010

இந்தியா திணறிய நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இலங்கை

கொழும்பு: மகா மோசமான பந்து வீச்சு காரணமாக, 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இலங்கையின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறிய நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இலங்கை.

இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. வழக்கம் போல இந்திய பந்து வீச்சாளர்கள் மொக்கையாக பந்து வீச, இலங்கை வீரர்கள் ரன் குவிக்க ஆரம்பித்தனர். முதல் நாளான நேற்றே பரனவிதனாவும், சங்கக்காராவும் ஆளுக்கு ஒரு சதம் போட்டு இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

முதல் நாள் ஆட்ட இறுதியில் இலங்கை 2 விக்கெட்களை இழந்து 312 ரன்களை எடுத்திருந்தது. பரனவிதனா 100 ரன்களில் ஆட்டமிழந்தார். தில்ஷன் 54 ரன்கள் எடுத்தார். சங்கக்காரா 130 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று காலை 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய சங்கக்காரா அபாரமான இரட்டை சதத்தைப் போட்டார். 219 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,ஷேவாக் பந்தில் டிராவிடிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் சங்கக்காரா.

மறுபக்கம் மஹேலா ஜெயவர்த்தனே தன் பங்குக்கு வெளுத்துக் கட்டினார். 244 பந்துகளைச் சந்தித்த ஜெயவர்த்தனே 174 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரும் இரட்டை சதம் போடாமல் தடுத்து விட்டனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.

சமரவீரா 76 ரன்களில் இருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இலங்கை அறிவித்தது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஷேவாக் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸை தொடங்கியது. முரளி விஜய் 16 ரன்களுடனும், ஷேவாக் 33 ரன்களுடனும் ஆடிக் கொண்டுள்ளனர்.

விக்கெட் இழப்பின்றி இந்தியா 60 ரன்கள் எடுத்துள்ளது

கருத்துகள் இல்லை: