வியாழன், 29 ஜூலை, 2010

புதிய பறவை 46 வருடங்களுக்கு பிறகும் House full

சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்து 1964-ல் ரிலீசான படம் புதிய பறவை. கடந்த வெள்ளியன்று சிவாஜியின் 9-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது இப்படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர். இதையொட்டி தியேட்டரை சிவாஜி ரசிகர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரித்தனர். 40 அடி உயர கட் அவுட்டும் நிறுவினர்.
படத்தை பார்க்க சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்தனர். முதல் இரு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றனர். ஞாயிற்றுக்கிழமை 80 ரூபாய் டிக்கெட் ரூ.150-க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாக படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் கூறினார். தொடர்ந்து 6 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.
இதுபற்றி சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு கூறும்போது, புதிய பறவை படம் பார்க்க கூட்டம் கூட்டமாய் ரசிகர்கள் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டனர். இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது என்றார். “புதிய பறவை” படம் ரிலீசானபோது சாந்தி தியேட்டரில் இந்திப்படமான “சங்கம்” படம் ஓடிக் கொண்டிருந்தது. எனவே “புதிய பறவை” படம் பாரகன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பட்டது என்றும் அவர் கூறினார்
நிறைய புதுப்படங்கள் ரிலீசான ஓரிரு நாளிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்படும் இக்கால கட்டத்தில் 46 வருடங்களுக்கு பிறகும் சிவாஜி படம் பார்க்க ரசிகர்கள் திரண்டது வியப்பாக இருந்தது என்று தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார்.
சிவாஜியை திரையில் பார்த்து ரசிகர்கள் பூக்களை அள்ளி வீசினார்கள். “எங்கே நிம்மதி”, “சிட்டுக் குருவி”, “ஆஹா மெல்ல நட”, “உன்னை ஒன்று கேட்பேன்” போன்ற இனிமையான பாடல் ஒலித்தபோது ரசிகர்கள் விசில் சத்தம் தியேட்டரை குலுங்க வைத்தது.

கருத்துகள் இல்லை: