சத்தியமங்கலம் : கடம்பூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணய புதையல், ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகாவுக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதி கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் மாதி. நான்கு நாட்களுக்கு முன், பேத்தி வினிதா வீட்டை சுற்றியுள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மண்ணின் அடியில் இருந்து மண் குடுவை தெரிந்தது. குடுவைக்குள் என்ன இருக்கிறது என பார்க்க அதை உடைத்தனர். குடுவைக்குள் இருந்த சிறிய மண் தட்டில், வட்ட வடிவிலான தங்க நாணயம் இருந்தது. இத்தகவல் காட்டு தீ போல பரவியதால், அப்பகுதி மக்கள் பழங்கால தங்க நாணயங்களை ஆவலுடன் பார்த்துச் சென்றனர். நேற்று முன்தினம் சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் தலைமையில், துணை தாசில்தார் நாகராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். புதையல் கண்டெடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அப்பகுதி மக்கள் மண் குடுவை, அதனுள் இருந்த 744 வட்ட வடிவிலான தங்க நாணயங்களை தாசில்தாரிடம் கொடுத்தனர். புதையலில் இருந்த நாணயம் தங்கம் தானா என்ற சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அனைத்தும் பழங்கால தங்க நாணயம் என உறுதி செய்யப்பட்டது. வட்ட வடிவிலான ஒவ்வொரு நாணயமும் 400 மில்லி கிராம் எடை கொண்டது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் கொடி உருவமும், மற்றொரு பக்கத்தில் எட்டு சிறிய புள்ளிகளும், இரு பெரிய புள்ளிகளும், இரு அரை வட்ட நிலா தோற்றமும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்க நாணயத்தின் தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக