சனி, 31 ஜூலை, 2010

பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம்’

வட பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை முதல் தெல்லிப்பளை வரையான பகுதி யாழ்ப்பாணம் - காங் கேசன்துறை வீதியில் மேற்கு பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் மீளக் குடியமருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு - தெற்கு உறவுப் பாலம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய சமாதான பேரவை வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்களை தென்பகுதிக்கு அழைத்து வந்துள்ளது.

இந்த ஊடகவியலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்தனர். அங்கு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவையும், இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி. உபே மெதவலவையும் சந்தித்தனர்.

இச்சமயம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர் தங்கி இருந்த பல கட்டடங்களும், தனியார் வீடுகளும் ஏற்கனவே உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினர் எப்போதும் சமாதானத்தையே விரும்புகின்றனர். அதனால் பழைய நிலைமை ஏற்படாதிருப் பதற்கு தேவையான சகல நடவடிக்கைக ளையும் மேற்கொண்டுள்ளோம்.

இராணுவத்தினர் யுத்தம் புரியக்கூடிய பிரிவினர் மாத்திரமல்லர். மாறாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யக்கூடிய, பிரிவினராகவும் அவர்கள் உள்ளனர். வட பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் பணிகளிலும், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக் கைகளிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, யுத்தம் முடிவுற்று சுமார் பதினொரு மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் நாம் தேசிய பாதுகாப்பு விடயத்திற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றோம்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றவும், குறைக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்றாலும், அவற்றை எடுத்த எடுப்பிலேயே முழுமையாக அகற்ற முடியாது. அவ்வாறு செய்வதால் பாதுகாப்பு படையினர் மாத்திரமல்லாமல் தமிழ் மக்களும் கூட பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும். இதற்கு நிறையவே முன்னனுபவங்கள் உள்ளன என்றார்.

இச்சந்திப்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேராவும் கலந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை: