சிறுவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ்நெற் :- -சியாமளா
வன்னியில் மீளக்குடியேறிய பகுதிகளில் சிறுவர்கள் கல்வியைக் கைவிட்டு தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக தொழில் புரிவதாக தமிழ்நெற் அழுது வடிகிறது.. இந்தச் சிறுவர்கள் சந்தைகளில் வியாபாரம் செய்வதைப் படங்களைப் போட்டு தமிழ்நெற் சென்டிமென்ரல் வியாபாரம் செய்கிறது. இதை உண்மையாகக் கொள்வதானால் இந்தச் சிறுவர்களின் துர்ப்பாக்கிய நிலைமைக்கு “யார் காரணம்” என்பதையும் ஆராயவேண்டிய அவசியமும் இருக்கிறது.
புலிகள் பலாத்காரமாக சிறுவர்களை இயக்கத்தில் இணைத்தபோது அந்தச் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படவில்லையா?
அவர்களுடைய குடும்பங்கள் பாதிக்கப்படவில்லையா?
புலிகளால் பலாத்காரமாக இணைக்கப்பட்ட சிறுவர்கள் தங்கள் கல்வியையும் இழந்து இறுதியில் தங்கள் உயிரையும் இழந்தார்கள்.
இறந்துபோன பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களே.
புலிகளால் பலாத்காரமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு தப்பியோடிய சிறுவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், புலிகளின் சித்திரவதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள்.
புலிகள் பலாத்காரமாக சிறுவர்களை இயக்கத்தில் இணைத்தபோது அலட்டிக் கொள்ளாத தமிழ்நெற் இன்று சிறுவர்களின் கல்வியைப் பற்றி அக்கறைப்படுகிறது. புலிகள் இயக்கத்தில் இணைக்கப்ட்ட சிறுவர்கள் எல்லாரும் பகுதி நேரப் பாடசாலைக்குச் சென்றார்களா?
புலிகளினால் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி கூடப் பாதிக்கப்பட்டிருந்தது.
புலிகள் பலாத்தகாரமாகச் சிறுவர்களைச் சேர்த்தபோது எதிர்த்தவர்களை புலிகள் கொன்றார்கள். அந்தக் கொலைகளையெல்லாம் தமிழ்நெற் நியாயப்படுத்தியிருந்தது.
இன்று புலிகள் அழிக்கப்ட்டு பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
87ம் ஆண்டு தமிழர்களது பொன்னான வாய்ப்பான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் குழப்பிய நாள் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிவரை தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அனைத்திற்கும் காரணமானவர்கள் புலிகள்தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இப்படியான பாதிப்புக்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்குரிய அனைத்து சந்தர்ப்பங்களும் புலிகளின் கையிலிருந்தது. அத்தனை சந்தர்ப்பங்களையும் துஷ்பிரயோகம் செய்தவர்கள் புலிகள்.
புலிகள் செய்கின்ற கொலைகளை நியாயப்படுத்தியும், மூடிமறைத்தும் இனந்தெரியாதவர்கள் என்று பழிகளை ஏனையவர்கள் மீது சுமத்தியும் தமிழ்நெற் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் பொய்களை விதைத்துக் கொண்டிருந்தது.
புலிகள் மக்களைக் கேடயமாக வைத்து வன்னியில் யுத்தம் புரிந்து கொண்டிருந்தபோது உலக நாடுகளும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டோரும் கேட்டுக் கொண்டிருந்தபோது தமிழ்நெற் அலட்டிக் கொள்ளவேயில்லை.
சிறுவர் சிறுமியர் புலிகளால் கடத்தப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலைதாரிகளாக தென்னிலங்கைத் தாக்குதல்கள் சிதறி இறந்தபோது தமிழ்நெற் அந்தச் சிறுவர்களின் கல்வியைப்பற்றி அக்கறைப்படவில்லை!
வன்னியில் தமிழர்கள் அழிந்ததும் இன்று சிறுவர்கள் தங்கள் கல்வியைத் துறந்து காய்கறி வியாபாரம் செய்யும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளானதற்கு புலிகள்தான் காரணம் என்பதை தமிழ்நெற் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தொடர்ந்தும் அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருப்பதால் தமிழ்நெற் எதுவும் சாதித்து விடப்போவதில்லை. சிங்கள இராணுவம் வன்னியைக் கைப்பற்றினால் என்ன நடக்குமென்று புலிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
வடக்கு கிழக்கு முழுவதுமே இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு இராணுவம் என்றும் கால் பதிக்காத இடங்களெல்லாம் இன்று கால் பதித்துள்ளது. வன்னியில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இறந்துகொண்டிருந்தபோது எந்த உலக நாடுகளும் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தும்ப வற்புறுத்தவில்லை, மாறாக ஆயுதங்களை கைவிட்டு சரணடையும்படி புலிகளைத்தான் வெளிநாடுகள் கேட்டுக் கொண்டன.
புலிகளை அழித்து வெற்றிகொண்ட இலங்கை அரசாங்கத்தைப்பற்றி தமிழ்நெற் குறை கூறுவது சந்திரனைப் பார்த்து நாய் குலைப்பதைப் போன்றதாகும்
ஆனால் இன்று கல்வியை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம் செய்கிறார்கள் என்று கவலைப்படுவதைவிட அவர்கள் இனிமேல் சிறுவர் படையில் இணைத்துக் கொள்ளப்படாமல் உயிர் பிழைத்துள்ளார்கள் என்று ஆறுதலடைவதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாகும்.
www.salasalappu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக