ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

மீண்டும் ஜெ. மரண அரசியல்! வெளியாகுமா சிகிச்சைப் படங்கள்?


மின்னம்பலம் : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற புதிதில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் சரி, விழாக்களில் பேசும்போதும் சரி அளந்து அளந்து பேசுவார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும், ‘என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்ற வார்த்தைகளையே பொருத்திப் பொருத்திப் பேசுவார். ஒரு செயற்கையான புன்னகையை பிற்சேர்க்கையாக வைத்திருப்பார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் தென்படும் எடப்பாடியாரின் பாடி லாங்வேஜும் வேறு, அவரது பேச்சு மொழியும் வேறு. மைக் ஆடும் வகையில், மைக் பெட்டியை தட்டி, பேச்சுக்காக எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைக்கூட பார்க்காமல் ஆவேசமாக, ‘இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது’ என்று கர்ஜனையாக பேச ஆரம்பித்தார் எடப்பாடி.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி தொடங்கி வைத்த இந்த பேச்சு கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவில் இன்னொரு பரிமாணத்துக்குப் போயிருக்கிறது.
“என்னை வீட்டுக்கு அனுப்புவேன் என்று சொல்கிறார் தினகரன். விரைவில் அவர்தான் மாமியார் வீட்டுக்குப் போவார்” என்று தலைமைக் கழகப் பேச்சாளரைப் போலவே பேசினார் எடப்பாடி. தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்குப் போவார் என்று எடப்பாடி அணியைச் சேர்ந்த சாதாரண பேச்சாளர்கள் சொல்வது வேறு. ஆனால், முதலமைச்சர் வாயில் இருந்து வரும்போது அதன் மதிப்பு வேறு.

அதேநாள், திண்டுக்கல் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அம்மா அவர்கள் 75 நாள்களாக அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது அவரை டாக்டர்கள் பார்க்கிறார்கள், நர்ஸ் பார்க்கிறார்கள், சசிகலா பார்க்கிறார். ஆனால், மத்திய அமைச்சர் பார்க்க முடியவில்லை. கவர்னர் பார்க்க முடியவில்லை. நாம் உட்பட யாரும் பார்க்க முடியவில்லை. ஏன்? நாம் யாரேனும் பார்த்துவிட்டால் அம்மா உண்மையைச் சொல்லிவிடுவார்களோ என்றுதான்... 75 நாள்களாக நமது தெய்வத்தை யாரும் பார்க்காமல் வைத்திருந்து கொலை செய்திருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரான ஜெயலலிதாவைக் காப்பாற்ற பிரதமர் மோடி முயன்றார். இதற்காக மருத்துவமனைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியைக் கூட பார்த்து பேசவிடாமல், மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர்” என்று நேரடியாக சசிகலா மீது கொலைக் குற்றத்தை முன்வைத்திருக்கிறார்.
இதே நேரம் கும்பகோணத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய ஓ.எஸ்.மணியன்... நேற்றுவரை தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக கருதப்பட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “தினகரனின் கதை இன்னும் மூணு நாளில் முடிஞ்சுடும். எழுதி வெச்சுக்கங்க. நான் கும்பகோணத்துல இருந்து சொல்லிட்டுப் போறேன். நடக்குதா இல்லையானு பாருங்க” என்கிறார்.
திருச்சியில் பேட்டியளிக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் சொன்னது உண்மைதான். யாரையும் பார்க்காமல் வைத்திருந்து அம்மாவைச் சசிகலா குடும்பத்தினர்தான் கொன்றுவிட்டார்கள்” என்று சொல்கிறார்.
இதற்கெல்லாம் மேலாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி செய்தியாளர்களிடம், “சசிகலா என்பவர் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மாதிரி. பரமசிவன் கழுத்தில் இருக்கும்போது பாம்பை வழிபடுவோம். பரமசிவனே இல்லாதபோது என்ன செய்வோம்? என்ன செய்வோம்?” என்று கேட்டு கோபச் சிரிப்புடன் போகிறார்.
ஆக... அண்ணா பிறந்த நாள் விழாவில், ‘தினகரன் மாமியார் வீட்டுக்குப் போகப் போகிறார்’என்று முதலமைச்சர் அறிவித்ததும், அதே அண்ணா பிறந்த நாள் விழாவில் வெவ்வேறு ஊர்களில் பேசிய அமைச்சர்கள், ஜெயலலிதாவை கொலை செய்தது சசிகலாதான் என்று ஒரே குரலில் சொல்வதும் எதேச்சையாக நடப்பதல்ல. நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டமிட்ட பேச்சாகவே இருக்கிறது.
இதற்கெல்லாம் பதிலளித்த டி.டி.வி.தினகரன், “உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை விதிவசத்தால் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டோம். இன்று அவர் முதலமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துப் பேசுகிறார். திண்டுக்கல் சீனிவாசன் இவ்வளவு பேசுகிறாரே... இதையெல்லாம் தெரிந்துதான் அன்று சின்னம்மாவை பொதுச் செயலாளர் ஆக வேண்டுமென்று கோரிக்கை வைத்தாரா? இதெல்லாம் தெரிந்துதான் சின்னம்மா கொடுத்த பொருளாளர் பதவியை பெற்றுக் கொண்டாரா? அம்மா மரணத்தின் மீது விசாரணை வரட்டும். அப்போது முதல் ஆளாக விசாரிக்கப்பட வேண்டியவர் திண்டுக்கல் சீனிவாசன்தான். இவ்வளவு தகவல் தெரிந்தும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று அவரை விசாரிப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டி இழந்துவிட்டார். அன்புநாதன், சேகர் ரெட்டி விவகாரங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் வலையில் இருக்கிறார். விரைவில் வீட்டுக்குப் போன கையோடு மாமியார் வீட்டுக்கும் போகப் போகிறார். அந்த பயத்தில்தான் இதை எல்லாம் பேசுகிறார். கொலைப் பழி என்ன, தாவூத் இப்ராஹிமோடு சேர்ந்து நான் குண்டு வைத்தேன் என்றுகூட சொல்லுவார்கள்” என்று பதில் சொல்லியிருக்கிறார் தினகரன்.
என்ன நடக்கிறது என்று அதிமுகவின் இரு தரப்பிலும் விசாரித்தோம்.
“எந்த அம்மா, உயிரோடு இருக்கும்போது காலில் விழுந்து வணங்கினார்களோ... அவர் இறந்தபிறகு அவரை எதிர்க்கட்சிகள் அல்ல, எங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களே கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன், ஓ.பி.எஸ்,. அணி வேட்பாளராக நின்றபோது, அம்மாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து எடுத்துச்சென்று ஓட்டு கேட்டார்கள். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடிதான் கண்டித்தார். ஆனால், இன்று தினகரனை எதிர்க்கும் கடைசி அஸ்திரமாக அம்மாவின் மரணத்தையே அவர் கையிலெடுத்துவிட்டார்.

அம்மாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறி வந்ததை நிராகரித்து வந்த எடப்பாடி பழனிசாமி... அணிகள் இணைப்பு நடக்க வேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி திடீரென, அம்மாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி கோரிக்கை ஏற்கப்பட்டதாக இரு அணிகளும் இணைந்தன. ஆனால், அந்த அறிவிப்பு முதல்வரால் வெளியிடப்பட்டு, இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகிறது. அந்த அறிவிப்பின் மீது எடப்பாடி எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமே இல்லை. அந்த விசாரணைக்கு யார் நீதிபதி என்று கூட இன்று வரை அறிவிக்கவில்லை. இதுதான் இவர்கள் அம்மாவுக்குத் தருகிற மரியாதை.
இந்த நிலையில் இப்போது மீண்டும் இவர்களுக்கு அம்மாவின் மரணம் அரசியல் செய்ய தேவைப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு கோர்ட் 20ஆம் தேதி வரைக்கும் தடை விதித்த நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட விஷயங்களைவிட பொது வெளியில் தினகரனை எவ்வளவு தாக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாக தாக்குங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக இவர்கள் எடுத்திருக்கிற விஷயம்தான் அம்மாவின் மரணம். அதனால்தான் சொல்லிவைத்தாற்போல் முதல்வர் மாமியார் வீடு என்று தொடங்கி வைக்க, அமைச்சர்கள் சசிகலா மீது கொலைக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக சொல்லி வருகிறார்கள். இந்த விஷயத்தில் இன்னும் சில அமைச்சர்கள் மௌனம் சாதித்து வருவதையும் இங்கே கவனித்தாக வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை சசிகலாவை எதிர்த்தோ, தினகரனை எதிர்த்தோ கடுமையாக தாக்கிப் பேசவில்லை. செங்கோட்டையன் இந்த அரசியலுக்குள்ளேயே வர விரும்பவில்லை என்கிறார். முதல்வர் உள்ளிட்ட மொத்தமுள்ள 33 அமைச்சர்களில் அதிகபட்சம் பத்து அமைச்சர்கள்தான் இதுபோன்ற சர்ச்சைப் பேச்சுகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள். மீதி இருபது பேர் இதுபோன்ற விஷயங்களில் அடக்கியே வாசிக்கிறார்கள்.
முதல்வருக்கு உண்மையிலேயே அம்மா மரணத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற அக்கறை இருந்தால், தான் முதல்வர் ஆன அன்றே செய்திருக்க வேண்டும். அல்லது கடந்த ஆகஸ்ட் 17 அறிவிப்பு வெளியிட்ட சில நாள்களுக்குள்ளாகவே செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு ரீதியாக எதுவும் செய்யாமல் அமைச்சர்களை விட்டு மீடியாக்களில் பேச விடுவது... தனது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து பற்றிய செய்திகளைத் திசை திருப்புவதற்காகத்தான்.
இந்த நிலையில் தினகரன் தரப்பிலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியான விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளலாம். அம்மா மரணத்துக்கே நாம்தான் காரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களே என்று சொல்லிய தினகரன் ஆதரவாளர்கள், “இனியும் தாமதிக்காமல் உடனடியாக அம்மா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தினகரனோ, ‘ஒவ்வொரு நாளும் எடப்பாடி எப்படி பயப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். ஆளுநராலும் மத்திய அரசாலும்கூட இனி ஆட்சியைக் காப்பாற்ற முடியாது. அந்தப் பயத்தில் இப்படி அவதூறு பேசுகிறார். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சின்னம்மாவை சிறையில் சந்திக்கிறோம். அப்போது அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோம். இப்போதே அம்மா சிகிச்சைப் படங்களை வெளியிட்டால். எடப்பாடியின் இந்த திசை திருப்பும் கேம் வெற்றி பெற்றுவிடும். எனவே முதலில் எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து தூக்குவோம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் தினகரன் ஆதரவாளர்கள், ‘இப்போதைக்கு அம்மாவின் சிகிச்சை படங்களை வெளியிட்டாலே நம் மீதுள்ள கறை அகன்றுவிடும்’என்று வலியுறுத்தி வருகிறார்கள்” என்று முடித்தனர்.
மெஜாரிட்டிக்கு ஆபத்து என்ற மேட்டரை திசைதிருப்பத்தான் ஜெ. மரணத்தை எடப்பாடி தரப்பினர் கையிலெடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் யாரையும் ஜெ.வின் ஆன்மா மன்னிக்காது என்பதே உண்மை.
- ஆரா

கருத்துகள் இல்லை: