ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

2019ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் .. தமிழக பாஜகவின் கூட்டணி கனவு!

தினமலர் : பாஜகவின் பெரிய கூட்டணி...  வரும், 2019ல் நடக்கவுள்ள
லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழகத்தில், மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது. தி.மு.க.,வை பரம எதிரியாக கருதி, விமர்சித்து வந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சென்னையில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். அப்போது வைகோவை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.பின், செப்., 5ல் நடந்த, 'முரசொலி' பவள விழாவிலும், வைகோ பங்கேற்றார்.< கோரிக்கை</ இதையடுத்து, 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., சேரும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் அளித்த பேட்டியில்,
'தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறாது' எனக்கூறி, வைகோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், மும்பையில் பிறந்த நாள் கொண்டாடிய, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானியை சந்தித்து, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.


அப்போது, ராம்ஜெத்மலானி, 'தேசிய அளவில், பா.ஜ., காங்கிரஸ் அல்லாத மூன்றாவதுஅணியை உருவாக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதற்கு வைகோ, 'உங்களின் முயற்சிக்கு, நான் நிச்சயமாக உறுதுணையாக இருப்பேன்; விரைவில், சென்னையில் மாநாடு நடத்துவேன்' என, கூறியுள்ளார்.இதற்கிடையில், நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ளவரை, வைகோ சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வைகோவிடம், பா.ஜ.,வைச் சேர்ந்த அந்த பிரமுகர், 'தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், 'மெகா' கூட்டணியை உருவாக்கும் திட்டம் உள்ளது.

அதில், அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - த.மா.கா., மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற வேண்டும் என, முடிவு செய்துள்ளோம். அந்த முயற்சிக்கு, நீங்கள் உதவ வேண்டும்' என,கூறியுள்ளார்.

இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:

'மெகா' கூட்டணி:லோக்சபா தேர்தலில், புதிய கூட்டணி அமைக்க, பா.ஜ., தலைமை விரும்புகிறது. தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளன.நடிகர் ரஜினி, புதுக்கட்சி துவக்கினால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க, விடுதலைச் சிறுத்தைகள் விரும்புகிறது.

ரஜினி வரவில்லை என்றால், வி.சி., முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும். எனவே, பா.ஜ., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - த.மா.கா., - பு.த., ஆகிய கட்சிகள் இடம் பெறும், 'மெகா' கூட்டணியை ஏற்படுத்த விரும்புகிறோம்.அ.தி.மு.க., - த.மா.கா., - பு.த., விஷயத்தில் பிரச்னைகள் இருக்காது. தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,வையும், இந்த கூட்டணியில் சேர்த்து விட்டால் போதும்; இது, வலுவான அணியாக உருவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: