ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

தினகரன் அளித்த பொறுப்பை ஏற்கிறேன் : கதிர்காமு எம்.எல்.ஏ!

பொறுப்பை ஏற்கிறேன் : கதிர்காமு எம்.எல்.ஏ!
தினகரன் அளித்த மருத்துவரணி இணைச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ கதிர்காமு, தற்போது பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இரு அணிகளையும் இணைக்க அமைச்சர்களுக்கு, தினகரன் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். கெடு முடிந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். இதில் 19 எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள்,' பொதுச்செயலாளர் நியமனமே தேர்தல் ஆணையத்தால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அப்படி இருக்க துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறிதான். அவர் நியமித்த புதிய நிர்வாகிகளின் பதவியும் கேள்விக்குறிதான். இதன் மூலம் தினகரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்' என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தினகரன் அளித்த இணைச்செயலாளர் பதவி தங்களுக்கு வேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீபெரும்புதூர் பழனி, பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் போஸ், பெரியகுளம் கதிர்காமு ஆகியோர் மறுத்துவிட்டனர். இதில் கதிர்காமு,' அதிமுக பிரிந்துள்ளது வேதனை தருகிறது. எனக்கு ஜெயலலிதா கொடுத்த எம்.எல்.ஏ பதவியே போதும்' என்று என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், தற்போது தனக்கு தினகரனால் அளிக்கப்பட்ட மருத்துவரணி இணைச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாக எம்.எல்.ஏ கதிர்காமு அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஆகஸ்ட்-6) செய்தியாளர்களிடம் பேசிய கதிர்காமு,' எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் தினகரன் அளித்த பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்தேன். தற்போது பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன்'என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: