ஞாயிறு, 7 மே, 2017

தமிழர்கள் டாக்டர்களாக வர முடியாது: திமுக,,, மத்திய அரசு நீட் தேர்வு..

தமிழர்கள் டாக்டர்களாக வர முடியாது: திமுகமதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘நீட்’ தேர்வு பாதிப்பு மற்றும் இந்தி திணிப்பு குறித்த கருத்தரங்கு நேற்று (6.5.2017) திருமங்கலத்தில் நடந்தது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.
மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: “திமுக ஆட்சிகாலத்தில்தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவத்துறையில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பது திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அதே நுழைவுத்தேர்வு போல் மத்திய அரசு நீட் தேர்வினைக் கொண்டு வந்துள்ளது.
இதையும் ஆரம்பத்திலேயே திமுக எதிர்த்தது. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவர்களைவிட சி.பி.எஸ்.சி. படிக்கும் மாணவர்களே அதிகளவில் மருத்துவத் துறைக்கு தேர்வாகும் நிலை உருவாகும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10, 15 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் டாக்டர்களாக உருவாக முடியாது. இதை மாணவர்களாகிய நீங்கள் கட்டாயம் எதிர்க்க வேண்டும்” என்று அவர் பேசியபோது வந்திருந்தவர்கள் கரவொலி எழுப்பி அதை வரவேற்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: