சனி, 21 ஏப்ரல், 2018

பாஜகவில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விலகினார்

மின்னம்பலம்: பல மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைக்
கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இன்று (ஏப்ரல் 21) பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை பதவியேற்றபோது, வாஜ்பாயின் அமைச்சரவையில் பதவி வகித்த எவருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. விதிவிலக்காக, சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சராக நீடித்து வருகிறார்.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உட்பட பல மூத்த தலைவர்களுக்கான முக்கியத்துவம், மோடி பதவியேற்றதும் குறைந்துபோனதாகச் சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக, மோடி அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார் யஷ்வந்த் சின்ஹா.

பண மதிப்பழிப்பு விவகாரத்தின்போது, நேரடியாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சாடினார்.
”மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் விளக்கங்கள் தவறானது. பணம் அச்சடிப்பு என்பது ஜிடிபி வளர்ச்சியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது பற்றி, மத்திய அரசு எதுவும் குறிப்பிடவில்லை. அதிகளவில் திரும்பப் பெறுவதால், பணத் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறுவது தவறான வாதம்” என்று குற்றம்சாட்டினார்.
கடந்த மாதம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றபோது, பாஜக அதிருப்தியாளர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் சத்ருகன் சின்ஹாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மூன்றாவது அணி அமைக்கும் அவரது முயற்சிக்கு மூவரும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று, பீகாரில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் யஷ்வந்த்.
இந்த நிலையில், இன்று அவர் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ’ராஷ்டிர மஞ்ச்’ என்ற அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசிய யஷ்வந்த், இதனைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா சவுத்ரி, பாஜகவை சேர்ந்த சத்ருகன் சின்ஹா, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்சிங் மற்றும் அசுதோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, தான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும், எதிர்காலத்தில் ஜனநாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். ”இன்று முதல் நான் தேர்தல் அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்கிறேன். பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் முடித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும், தான் எந்த உயர் பதவிகளையும் விரும்பவில்லை என்றும், அவ்வாறு எந்தப் பதவியின் மீதும் தனக்கு ஆசையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கிப்போனபோது, மோடி தலைமையிலான மத்திய அரசையே குறை கூறினார் யஷ்வந்த். ”நாடாளுமன்றம் முழுதாக இயங்காததற்கு, மத்திய அரசே பொறுப்பு. பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க்கட்சிகளுடன் இதுகுறித்து ஒருமுறை கூட ஆலோசனை நடத்தாமல் இருந்தார் பிரதமர்” என்று தெரிவித்திருந்தார்.
யஷ்வந்த் கட்சியிலிருந்து விலகியது பற்றி, பாஜகவின் மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: