வியாழன், 19 ஏப்ரல், 2018

ஸ்டாலின் : இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்

இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்மாலைமலர் :தமிழகத்தில் இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, லோக் ஆயுக்தா தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்த உத்தரவு, நிர்மலா தேவி விவகாரம் மற்றும் எச்.ராஜா சர்ச்சை கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஸ்டாலின் கூறியதாவது:-
தாங்கள் செய்து வரும் ஊழல்கள் வெளியில் வந்துவிடும் என பயந்து லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வராமல் உள்ளனர். சட்டமன்றத்தில் இதனை பலமுறை நான் எழுப்பியபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதை கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இப்போதாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்து, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவேண்டும்.




காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறிவருவதாக சந்தேகம் எழுகிறது. மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார். ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. தொடர்ந்து போராடும்.

நிர்மலா தேவி விவகாரத்தில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும்

tamilthehindu :தமிழக அரசு இனியாவது திருந்தி உச்ச நீதிமன்ற ஆணைப்படி லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை வரவேற்கத்தக்கது.
12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாதது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்காததற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதேகருத்தைத் தான் பாமக கடந்த இரு ஆண்டுகளாக கூறிவருகிறது.
இதே வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து 2 வாரங்களுக்குள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுதொடர்பாக பாமக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் கூறும் காரணம் என்னவென்றால் லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்யவுள்ளது; திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது தான். இது ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் அபத்தமான வாதம்.
லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத நிலையில், லோக்பால் தேர்வுக்குழுவின் உறுப்பினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் என்று மாற்றுவதற்காக லோக்பால் சட்டத்தின் 4(1)(சி) பிரிவிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக 44-வது பிரிவிலும் மட்டுமே திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதைக் காரணம் காட்டி தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது’’ என்று கூறப்பட்டிருந்தது. இப்போது உச்ச நீதிமன்றமும் இதே கருத்தைக் கூறி, தமிழகத்தில் விரைவாக லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியாவது திருந்த வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: