திங்கள், 16 ஏப்ரல், 2018

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்?

மின்னம்பலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தமிழகத்தில் வேட்பாளராக நிறுத்த
பாஜக திட்டமிட்டிருப்பதாக வெற்றிவேல் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக அரசை மத்திய பாஜக அரசு இயக்கிவருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சசிகலா சகோதரர் திவாகரன், ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும், அப்போது மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது என்றும் அந்தக் கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதல்வர் பதவியை வாங்கிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது என்றும்
கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் வலுவான நபர் ஒருவரைத் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தவும் பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமனை வேட்பாளராக அறிவிக்கவே பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் பரவியது.

அதற்கேற்றார்போல், தமிழகத்துக்குத் தொடர்ச்சியாக வந்த நிர்மலா சீதாராமன் மீனவர் பிரிட்டோ மரணம், நீட் விவகாரம் எனத் தமிழக பிரச்சினைகள் அனைத்திலும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த அவர், தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும் எனக் கருத்து தெரிவித்தது அரசியல் கட்சிகள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைச்சரான அவர் எப்படி நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தன.
‘தமிழகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அல்ல, சிவபெருமானையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும்கூட பாஜகவினால் வெற்றிபெற முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் விமர்சித்திருந்தார். எனினும், தமிழக பாஜகவில் நிர்மலா சீதாராமனை முன்னிறுத்தும் வகையில் எந்தவித தகவலும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
ராணுவக் காட்சியை நடத்த பல்வேறு மாநிலங்களும் போட்டிப்போட்ட நிலையில், தமிழகத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆலோசனையின் காரணமாகவே தமிழகத்தில் ராணுவக் காட்சி நடைபெற்றதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் நிர்மலா சீதாராமனை முன்னிலைப்படுத்தவும் பாஜக முயற்சிக்கிறது என்ற பேச்சும் எழுந்தது.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், “எடப்பாடி அரசு, மோடியின் அடிமை அரசாகச் செயல்பட்டு பிச்சை எடுத்து வருகிறது. எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் இந்த ஆட்சி அகற்றப்படும்.
ஆர்.கே.நகரில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மக்களிடம் கொள்ளையடித்து வருகிறார்கள். இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருந்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பதை விரைவில் பட்டியலிட்டு வெளியிடுவேன்.
ஆர்.கே.நகர் தொகுதி, டிடிவி தினகரன் தொகுதி என்பதால் மீனவர்கள் உட்பட அனைத்து மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்” என்று கூறினார்.
மேலும்,“நிர்மலா சீதாராமன் ராணுவக் காட்சியை இங்கு நடத்தியது தமிழகத்தின் மீதான பாசத்தால் அல்ல. தமிழகத்தின் வருங்கால பாஜக முதல்வர் வேட்பாளர் அவர்தான். அதற்காகத்தான் ராணுவக் காட்சி தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது” என்று வெற்றிவேல் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: