ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல் .. கமிஷனர் கைது .. லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல்தினத்தந்தி :சென்னை திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய சோதனை நடத்தினர். அம்பத்தூர், சென்னை திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ;உதவி கமிஷனர்.. சென்னை திருமங்கலம் சரக போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் கமில்பாஷா. ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தின் மாடியில் இவரது அலுவலகம் இயங்கிவருகிறது. அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு கமில்பாஷா பணியில் ஈடுபட்டு இருந்தார். திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.


இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு லபக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

முதலில் அலுவலக வாசலில் நின்று இருந்த உதவி கமிஷனரின் ஜீப்பில் சோதனை செய்தனர். அதில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், பின்னர் உதவி கமிஷனர் அலுவலகத்திலும், அவரது அறையிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ரூ.5 லட்சத்து 8 ஆயிரம்

அவரது அறையில் உதவி கமிஷனர் கமில்பாஷாவுடன் கொரட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் செல்வம் என்பவர் பேசிக்கொண்டு இருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.

அப்போது உதவி கமிஷனர் கமில்பாஷாவின் மேஜையில் ரூ.2½ லட்சமும், செல்வத்திடம் ரூ.2 லட்சத்து 58 ஆயிரமும் இருந்தது. அந்த பணம் எப்படி வந்தது? என கேட்டபோது இருவராலும் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. அதற்கான ஆவணங்களையும் அவர்களால் உடனடியாக காட்டமுடியவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கேள்விகளுக்கு இருவரும் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர்.

இதையடுத்து 2 பேரிடமும் இருந்த ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விடிய விடிய சோதனை

இரவு 11 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை அதிகாலை 4 மணிவரை விடிய விடிய நீடித்தது. இந்த சோதனையின்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீஸ்காரர்கள் லோகிதாஸ், சிலம்பரசன், தேவேந்திரன் உள்ளிட்டோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து உதவி கமிஷனர் கமில்பாஷாவிடம் காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்தும் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

நில பிரச்சினை

அதன்படி கமில்பாஷா நேற்று காலை 11 மணியளவில் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக திருமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பெருமளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. மேலும் ஒரு நிலம் சம்பந்தமான பிரச்சினையை தீர்த்துவைக்கும்படி கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் உதவி கமிஷனரை அணுகியதாகவும், அதற்கு லஞ்சமாக ரூ.8 லட்சம் பேரம் பேசப்பட்டு, முதல் தவணையாக சிறிது பணம் கைமாற இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.

பரபரப்பு

அதன்படி கட்டிட ஒப்பந்ததாரரிடம் இருந்து உதவி கமிஷனர் லஞ்சம் வாங்கினால் கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்திலேயே நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: