வெள்ளி, 20 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

தினத்தந்தி :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும்
மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்துவோம் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தி.மு.க.வும், கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்திய பிறகே, சற்று விழித்தெழுந்து அனைத்து கட்சி கூட்டத்தை மாநில ஆட்சியாளர்கள் நடத்தினார்கள். அதன் தீர்மானங்களை மத்திய ஆட்சியாளர்கள் மதிக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினேன்.


அரைகுறை மனதுடன் மாநிலத்தை ஆள்பவர்கள் அந்தக் கூட்டத்தைக் கூட்டினாலும், தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் ஆர்வத்துடன் அதில் பங்கேற்று, முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, சிறப்புத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினோம். அதன்பிறகும் மத்திய அரசும், பிரதமரும் மவுனம் காத்த நிலையில், மாநில ஆட்சியாளர்கள் இந்த வஞ்சகத்தைக் கண்டும் காணாமல் இருக்கவே, தி.மு.க. தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் போராட்டக்களம் கண்டது.

வீறுகொண்ட வேங்கையென எழுந்துள்ள போராட்ட உணர்வின் அடுத்தகட்டமாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்தபடி, பிரதமரை நேரில் சந்திக்க அனுமதிகேட்டு கடிதம் எழுதியிருப்பதுடன், மத்திய-மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து, காவிரி உரிமையை நிலைநாட்ட மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23-ந்தேதி திங்கட்கிழமையன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் திரளாகப் பங்கேற்கும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23-ந்தேதி மாலையில், நமது பொதுநோக்க உணர்வின் வெளிப்பாடாக உரிமைப்போரின் ஒப்பற்ற அடையாளமாக நடைபெறவுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள அசைக்கமுடியாத உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவும் வலியுறுத்தித் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒவ்வொன்றும், எப்படி பொதுமக்களின் பேராதரவுடனும், பெருந்திரள் பங்கேற்புடனும் நடைபெறுகிறதோ, அதுபோலவே மனித சங்கிலிப் போராட்டமும் மறக்க முடியாத வெற்றிபெறும் வகையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், ஒன்றிய - நகர செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும், அந்தந்தப் பகுதியில் உள்ள கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் அரவணைத்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய ஆட்சியாளர்கள், இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என கதிகலங்கும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையை மனித சங்கிலி அறப்போராட்டம் வாயிலாக உணர்த்துவோம். மாநில உரிமையை அடகுவைத்து ஆட்சியில் நீடிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் தக்கபாடம் புகட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: