செவ்வாய், 17 ஏப்ரல், 2018

டெல்லியில் டென்மார்க் பெண் பலாத்காரம் 5 பேரின் மரணம்வரை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது

டென்மார்க் பெண் கற்பழிப்பு; 5 பேரின் மரணம்வரை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததுதினத்தந்தி :டெல்லியில் 4 வருடங்களுக்கு முன் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரணம்வரை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி, டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் அன்றிரவு ரெயில்வே நிலையம் அருகே பஹர்கஞ்ச் பகுதியில் அமைந்த அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியுள்ளார்.
ஆனால் வழி தெரியாமல் அருகில் இருந்த ஒரு நபரிடம் ஓட்டலுக்கு செல்லும் வழி கேட்டுள்ளார். அந்த நபர் ரெயில்வே நிலையத்திற்கு அருகே தனியாக இருந்த பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்றார். அங்கு அவரது பொருட்களை கொள்ளை அடித்த 9 பேர் கத்தி முனையில் அவரை கற்பழித்துள்ளனர். இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 10ந்தேதி நீதிபதிகள், 5 கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணம்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
 கடத்தல் மற்றும் கும்பலாக கற்பழிப்பு என்ற மனித தன்மையற்ற மற்றும் கொடிய செயல்கள் தேசத்தின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை எஸ். முரளிதர் மற்றும் ஐ.எஸ். மேத்தா ஆகியோர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டது. வழக்கு விசாரணையை நடத்திய அதிகாரி முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வழக்கு விசாரணையில் சாட்சி ஒருவர், குற்றவாளிகள் பெண்ணுடன் குற்ற செயலில் ஈடுபட்ட நிகழ்வை பார்த்தேன் என கூறியது, இயற்கையான சாட்சி இல்லை என கூறி நீதிபதிகள் அமர்வு நிராகரித்து விட்டது.

எனினும், பாதிப்படைந்த பெண்ணின் சாட்சியாக, டி.என்.ஏ. அறிக்கை முடிவை கருத்தினில் கொண்டு, விசாரணை நீதிமன்றத்தின் குற்றவாளி என்ற தீர்ப்பு சரியானது என நாங்கள் திருப்தி அடைகிறோம். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என அந்த அமர்வு தெரிவித்துள்ளது. இதனால் கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட மரணம்வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: