வெள்ளி, 20 ஏப்ரல், 2018

நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணிதமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95. 9445112675
பத்திரிக்கைச் செய்தி!
ருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளை பாலியல் முறைகேட்டிற்கு அழைத்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், யாருக்காக இந்த இழிசெயலை நிர்மலா தேவி செய்தாரோ அந்த உயர் அதிகாரிகள் யார் யார் என்று இன்னும் அடையாளப்படுத்தவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும்  தமிழ ஆளுநரும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதுரை கமாராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேந்தரான ஆளுநரும் அவசர அவசராம மாற்றி மாற்றி விசாரணைக்குழு அமைத்தார்கள்.
ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தார். அங்கேயும் பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறி நடத்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ள வேந்தரே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை வைத்து ஒரு நபர் விசாரணை குழு அமைத்துள்ளது அதிகார வரம்பை மீறிய செயல் மட்டுமல்ல, இது உண்மையை மூடிமறைப்பதற்கான முயற்சியாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எல்லா பிரச்சனைகளிலும் குற்றவாளிகளான உயர் அதிகாரிகள் தப்பி விடுகின்றனர். SVS மருத்துவக்கல்லூரி முறைகேடு – மூன்று மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அக்கல்லூரியின் தாளாளரும் தற்போது பிணையில் வந்துவிட்டார், கல்லூரியும் இயங்குகிறது.
பல்வேறு பிரச்சனைகளுக்காக அமைக்கப்பட்ட பல விசாரணைக் கமிட்டிகள், அதன் அறிக்கைகள் எல்லாம் என்ன ஆயின? எந்த உண்மையாவது வெளிவந்திருக்கிறதா? யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள உயரதிகாரிகள், அரசியல்வாதிகளே விசாரணைக் கமிட்டிகளை அமைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் அதன் தலைவர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். நிர்மலா தேவி வழக்கில் கூட கைது, விசாரணைக் குழு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது.
பல பல்கலைக்கழகங்களிலும், அரசு உதவிபெறும் கல்லுரிகளிலும் போராசிரியர்கள் நியமனங்களில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றது. அண்ணா, பாரதியார், பெரியார் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் பல கோடிகளை கொடுத்துத்தான் பதவி பெற்றுள்ளனர். பணம் கொடுத்து வேலைபெற்ற பேராசிரியர்கள் தண்டிக்கப்படாமல் பணியில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையுமே ஊழல்-லஞ்ச முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு என முடை நாற்றம் வீசுகிறது. நிழலுலக தாதாக்கள் போல செயல்படுட்டு வரும் உயர்கல்வித்துறைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் எப்போதும் கைது செய்யப்பட்டதில்லை.
இதனூடாகவே தமிழக பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடக்கிறது. சமீபத்தில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தர அடிப்படியிலான தன்னாட்சி (Graded Autonomy) வழங்கியுள்ளது. இத்தன்னாட்சி விதிகளின் படி UGC-ன் கட்டுப்பாட்டிலிருந்து இப்பல்கலைக்கழகங்கள் முழுமையாக விடுவிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகங்கள் புதிய பாடதிட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை ஆரம்பிப்பதற்கும் புதிய பட்டயப்படிப்புகளை வழங்குவதற்கும் பேராசிரியர் தேர்வுகள், மாணவர் சேர்க்கை ஆகியவற்றிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை.
வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். அம்மாணவார்களுக்கான கல்விகட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் இப்பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் வழங்கலாம். இதற்காக பல்கலைகழக மானிய குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. மேலும் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான செலவில் ஒரு பகுதியை தாங்களே உருவாக்கி கொள்ளவேண்டும் என இத்திட்டம் மறைமுகமாக நிர்பந்திக்கிறது.
இதனால் பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படும். கல்விக்கட்டணம் பலமடங்கு உயரும். அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பல்கலைக்கழகங்கள் விலக்கப்பட்டு லாபமீட்டக்கூடிய கல்வி தொழிற்சாலையாக இயக்கப்படும். கிராமப்புற மற்றும் ஏழைமாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும். ஏறத்தாழ அரசு பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான முயற்சியே தர அடிப்படையிலான தன்னாட்சியாகும்.
தமிழகம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உயர்கல்வியில் முன்னணியில் இருந்தாலும் இந்தியாவிலேயே இங்கு தான் அதிகமான தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. கல்வியானது வெளிப்படையாகவே ஒரு வியாபார பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. சிறிதளவேனும் வழங்குப்பட்டு வந்த கல்வி உதவித்தொகைகளும் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வந்த உயர்கல்விக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டதே இதன் வெளிப்பாடுதான்.
கல்வி கொள்ளை, லஞ்ச – ஊழல் முறைகேடுகள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவைகளுக்கு கல்வி வியாபாரமானதுதான் முக்கிய காரணமாகிறது. இதை எதிர்த்துப்போராட மாணவர்களுக்கு வழியில்லை. கல்வி நிலையங்கள் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முழுவதுமாக பறித்துள்ளன. எனவே, மாணவர்களின் நலன்களை பாதுகாக்க, உயர்கல்வித்துறையை மீட்க கல்வியாளர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் கண்காணிப்பில் கல்வித்துறை இயங்க வேண்டும் எனக் கருதுகிறோம்.
கோரிக்கைகள் :
  • நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க ஆளுநருக்கு தார்மீக ரீதியாக எந்தவித உரிமையும் கிடையாது. இதன் மூலம் விசாரணை நியாயமாக, நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே ஆளுநர் அமைத்த குழுவை உடனே திரும்பப்பெற வேண்டும்.
  • பணியிலுள்ள மாவட்ட பெண் நீதிபதி தலைமையில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட நீதிவிசாரணைக்குழு அமைக்க வேண்டும். அதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மாணவிகளும் தங்கள் கருத்தை அச்சமின்றி தெரிவிக்க வழியேற்படும். சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டுவரவும் முடியும்.
  • இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நிர்மலா தேவி அடையாளம் காட்டியுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக இரண்டு பேராசிரியர்களும், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் உடனே கைது செய்யப்பட வேண்டும்.
  • ஆளுநரும், காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் அவர்கள் பதவியில் நீடிக்க தகுதியில்லை. பதவி விலக வேண்டும்.
  • ஆளுநரால் பன்வாரிலால் அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் சூரப்பா, திம்ம சூரிய நாராயண சாஸ்திரி, பிரமிளா தேவி ஆகியோர் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மாணவிகள் தங்களுடைய குறைகளை முறையிடுவதற்காக பல்கலைக்கழக நிர்ணய குழு பரிந்துரையின் படி கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தனி பிரிவுகள் எந்தக்கல்லூரிகளிலும் செயல்பாட்டில் இல்லை. அவைகளை முறையாக இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடுவதற்காக மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
  • அரசு பல்கலைக்கழகங்களை தரஅடிப்படையிலான தன்னாட்சியாக்குவது இவைகளை தனியார்மயமாக்கும் முயற்சியே. இதனை அரசு உடனே கைவிட வேண்டும்.
இவண்
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.
பேரா. வீ. அரசு, தமிழ்த் துறை முன்னாள் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்.
பேரா. ப. சிவக்குமார், முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
பேரா. அ. கருனாணந்தம், வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி.
பேரா. ச. சாந்தி

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

1 கருத்து:

vellai varanan சொன்னது…

உண்மை. நியாமான விசாரணை நடத்த பட வேண்டும். கவர்னர் கேவலமான முன் உதாரணம். முதன்மை செயலாளர் இருக்கும் வரை எஸ் வி சேகரை எதுவும் செய்ய இயலாது undefined தமிழர்கள் சாதியை மறந்து ஒன்று சேர வேண்டும்