வியாழன், 19 ஏப்ரல், 2018

எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் .. காரைக்குடியில்..

காரைக்குடியில் எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்தினத்தந்தி  :தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் காரைக்குடியில் உள்ள எச்.ராஜாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் காரைக்குடியில் ஊர்வலமாக சென்று எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.


முடியரசனார் சாலையில் ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது தி.மு.க.வினர் எச்.ராஜாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் உருவபொம்மையை எரித்த மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் உள்பட 100 பேரை போலீசார் கைதுசெய்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கல்லல் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, சாக் கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு தலைவர் ஆனந்தன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகர், நகர அவைத்தலைவர் ராகோ.அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில், வக்கீல் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: